வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடல்… இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு.. மக்கள் பெரும் கொண்டாட்டம்!
Vallalar International Centre Plan Dropped : கடலூர் மாவட்டத்தில் வடலூரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை கைவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையின் பெருவெளியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்ட எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த திட்டத்தை கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று வியாழக்கிழமை ( ஜூலை 30- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை கைவிடுவதாக அறிவித்துள்ளதை குறிப்பிட்டார். அத்துடன், சத்திய ஞான சபையின் பெருவெளியில் சுற்றுச்சூழல், நூலகம் மற்றும் யாகசாலை அமைக்கப்படும் என அரைநாடு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மையம் அமைக்க ஏன் எதிர்ப்பு
வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்திற்கு பெருவெளி பாதிப்பு, கொள்கை மீறல் மற்றும் வள்ளலார் விருப்பத்திற்கு எதிரான செயல் ஆகியவை முக்கிய காரணங்களாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில், சத்ய ஞான சபை அமைந்துள்ள திறந்தவெளி பகுதியான பெருவெளியில் கட்டுமானங்கள் செய்வது அங்கு கூடும் லட்சக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்கும், சன்மார்க்க நிகழ்வுகளுக்கும் இடையூறாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: எல் நினோ கண்காணிக்க குழு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 நிபுணர்கள்..




வள்ளலார் சர்வதேச மையம் என்றால் என்ன
வள்ளலார் காட்டிய எளிய ஆன்மீக நெறிமுறைக்கும், சமத்துவ கொள்கைக்கு மாறாக அந்த இடத்தில் பெரிய அளவில் வணிகமயமாக்கல் மற்றும் கட்டிடங்கள் அமைக்கப்படுவது வள்ளலாரின் விருப்பத்திற்கு எதிரானது என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே, பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்காக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
பார்வதிபுரம் மக்கள் பெரும் கொண்டாட்டம்
அப்போது, சுவர்கள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இறங்கி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில், பார்வதிபுரம் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். சர்வதேச மையம் அமைக்கப்படவுள்ள பெருவெளி உள்ளிட்ட சத்திய ஞான சபை வளாகம் அமைந்துள்ள இடம் முழுவதும் பார்வதிபுரம் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை கைவிட்டதை அந்த பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?