ஆசிரியர்கள் கண்டிப்பு.. ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள்.. திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு!
Tiruvannamalai Government School Students Fainted: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் திட்டயதால் மன முடைந்த 3 மாணவிகள் பள்ளி வளாகத்தில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால், மன வேதனை அடைந்த மூன்று மாணவிகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தும் மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 3 மாணவிகளும் அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக மாணவிகள் சத்தம் போட்டனர்.
செங்கம் மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி
இதை அறிந்த, ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்து மாணவிகளை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
மேலும் படிக்க: கைதிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை பேச்சு வழக்கில் பிடிவாரண்ட் திடீர் ரத்து.. என்ன காரணம்!




தீவிர சிகிச்சை பிரிவில் பிளஸ் டூ மாணவி
மேலும், அவர்கள் ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த 3 மாணவிகளின் பிளஸ் டூ படித்து வரும் ஒரு மாணவி மட்டும் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அந்த மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக ரத்த அழுத்தம் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகளின் பெற்றோர்கள் வைத்த கோரிக்கை
அத்துடன், மாணவிகளுக்கு ரத்த அழுத்த மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது. ஆசிரியர்கள் தனி அறையில் வைத்து மாணவிகளை கண்டித்தார்களா என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இதில், யார் மீது குற்றம் உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: காவலாளியை மிரட்டி லஞ்சம் பெற்ற அதிகாரி… பாய்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. ஈரோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!