காவலாளியை மிரட்டி லஞ்சம் பெற்ற அதிகாரி… பாய்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. ஈரோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!
Erode Block Development Officer Arrested : ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர காவலாளியை மிரட்டி மாதம்தோறும் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 55 வயது). இவர், ஈரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வட்டார வளர்ச்சி அதிகாரி மூலமாக நேரடியாக நியமனம் செய்யப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு தினக்கூலியாக ரூ.762 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சண்முகசுந்தரம் மாதம் தோறும் ஊதியம் பெறவும், பணியில் தொடர்ந்து நீடிக்கவும் மாதம் தோறும் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரி லதா கூறியதாக தெரிகிறது. அதன்படி, காவலாளின் சண்முகசுந்தரம் மாதம் தோறும் தனது ஊதியத்தில் இருந்து ரூ. 10 ஆயிரத்தை வட்டார வளர்ச்சி அதிகாரி லதாவுக்கு லஞ்சமாக கொடுத்து வந்துள்ளார்.
ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார்
இந்த நிலையில், ஜூலை மாதத்துக்கான ஊதியம் இந்த மாதம் சண்முகசுந்தரத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது. அப்போது, சண்முகசுந்தரத்தை அழைத்த வட்டார வளர்ச்சி அதிகாரி லதா ரூ. 10 ஆயிரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தல்கள் காரணமாக லஞ்சம் கொடுப்பதற்கு காவலாளின் சண்முகசுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!




ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பிடிஓ அதிகாரி கைது
அந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் ஆய்வாளர் ரேகா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, சண்முகசுந்தரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அந்த ரூபாய் நோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அதிகாரி லதாவிடம் சண்முகசுந்தரம் கொடுத்தார். அப்போது, லஞ்சப் பணத்தைப் பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி லதாவை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு
இதை தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பல மாதங்களாக காவலாளி சண்முக சுந்தரத்தை மிரட்டி மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வட்டார வளர்ச்சி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: கைதிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை பேச்சு வழக்கில் பிடிவாரண்ட் திடீர் ரத்து.. என்ன காரணம்!