அண்ணாமலை விரைவில் டெல்லி பயணம்? பாஜக தலைமையுடன் முக்கிய ஆலோசனை!
Annamalai Visit Delhi: தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபீனை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை எந்தவிதமான பொறுப்பும் கட்சியில் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனிடையே, மத்திய அமைச்சர் பதவி, பாஜக தேசிய தலைவர் பதவி ஆகியவை அண்ணாமலைக்கு வழங்கப்பட இருப்பதாக பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், திடீரென அந்த பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகினார். அத்துடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு பாஜக தலைமை அறிவுறுத்தியும், போட்டியிடுவதை அண்ணாமலை வெளிப்படையாகவே தவிர்த்து விட்டார். அத்துடன், போட்டியிடாதது தொடர்பாக பாஜக தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
டெல்லி செல்லும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
இவ்வாறாக அண்ணாமலை இருந்து வந்த நிலையில், இன்று அல்லது நாளை அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காலை சுமார் 10 மணிக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தின் அரசியல் சூழல், தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்டவை தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. ஆழ்கடல் பயணத்துக்கு தயாராகும் படகுகள்.. பராமரிப்பு பணிகளில் மீனவர்கள் மும்முரம்!




பாஜக தேசிய தலைவருடன் முக்கிய ஆலோசனை
மேலும், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கட்சியில் பெரிதளவு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது, தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலை புதிய கட்சி அல்லது புதிய அமைப்பை தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஜூன் 3- இல் நிலைப்பாட்டை அறிவிக்கும் அண்ணாமலை
அத்துடன் கோயம்புத்தூரில் தரணி ஆழ வா தலைவா என்ற தலைப்பில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டி உள்ளனர். இதில், புதிய இயக்கம் ஒன்று தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அண்ணாமலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், நாளை மறுநாள் புதன்கிழமை ( ஜூன் 3- ஆம் தேதி) தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழல் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கோவை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வாகன ஓட்டிகளே உஷார்.. பாதுகாப்பு குழு நடவடிக்கை!