முதல்வர் விஜய் இன்று திருச்சி வருகை.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
CM Vijay Visit To Trichy: திருச்சியில் நடைபெறும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில், விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உள்பட அந்த மாவட்டத்தின் பிறர் தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவதற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு இன்று திங்கள்கிழமை ( ஜூன் 1) நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக சத்திரம் பகுதியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றடைகிறார். அங்கிருந்து பிரத்தியேக வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை வலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல உள்ளார். அங்கு இன்று மாலை சுமார் 4 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பங்கேற்க அனுமதியில்லை
இதை தவிர்த்து பிறர் பங்கேற்க அனுமதி கிடையாது. இதேபோல, கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோர் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாதவாறு நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு




நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கான அடிப்படை வசதிகள்
இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்திருந்தார். இந்த தொகுதி உட்பட பிற தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல்
அவ்வாறு தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறுவதற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வராக பதவி ஏற்ற பின் ஜோசப் விஜய் இன்று முதல் முறையாக திருச்சி வருகை தர உள்ளார். சட்டமன்ற தேர்தலின் போது, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகவும், பிரச்சாரத்திற்காகவும் விஜய் திருச்சி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கிழக்கில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? நெஞ்சில் சுட்டு விடுவதாக மிரட்டல்.. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்!