சேலம் சிறையில் விசாரணை கைதி மர்ம சாவு… வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை.. ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு!
Salem Central Jail Warder Suspend: சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் வார்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சம்பவத்துன்று மது போதையில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,200- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சேலத்தை சேர்ந்த 21 வயது இளைஞரான முத்து லிங்கம் என்பவர் சந்தன மரம் கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறை காவலர்கள், அந்த கைதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த கைதியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
சேலம் சிறையில் மாவட்ட நீதிபதி விசாரணை
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சேலம் மாவட்ட நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை ( மே 29- ஆம் தேதி) சிறைக்கு சென்றிருந்தார். அங்கு, சிறை அதிகாரிகள், சிறை வார்டன்கள் மற்றும் உயிரிழந்த கைதியின் உடன் தங்கியிருந்த பிற கைதிகள் உள்ளிட்டோரிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு இருந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: சிங்கப்பெண் அதிரடிப்படை – 18 காவல்துறையினர் நியமனம்




சிறை வார்டர் பணியிடை நீக்கம்
இதே போல, உயிரிழந்த கைதியுடன் தொடர்பில் இருந்த சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீதிபதியின் விசாரணையில் சம்பவத்தன்று சிறை வார்டர் ஒருவர் மது போதையில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த சிறை வார்டர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், அந்த சிறை வார்டரை பணியிடை நீக்கம் செய்து சிறை துறையின் உயர் அதிகாரியான கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கைதி உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணை
மேலும், கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கைதி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிறைத்துறை வார்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம் – நிவாரண நிதி அறிவித்த முதல்வர்