மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. காட்டுப்பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. 4 சிறுவர்கள் கைது!
Madurai Girl Harassment: மதுரை மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 சிறுவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பகுதியில் அமைந்துள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவில், சிறுமி பங்கேற்று உள்ளார். அப்போது, அதே திருவிழாவுக்கு வருகை தந்திருந்த சிறுமிக்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படும் 4 சிறுவர்கள் அந்த சிறுமியை திருவிழாவில் நடைபெற்றுள்ள பொருட்காட்சி திடலுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுமியும் தனக்கு தெரிந்தவர்கள் தான் என உடன் சென்றுள்ளார். அந்த பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாத காட்டுப்பகுதி என்பதால் அங்கு வைத்து சிறுமியை 4 சிறுவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த சிறுமியை அங்கு விட்டு விட்டு 4 சிறுவர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
காட்டுப்பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அங்கிருந்து அழுது கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது பெற்றோர் சிறுமி அழுவது குறித்து கேட்டுள்ளனர். அப்போது, நடந்த விவரங்களை அந்த சிறுமி கண்ணீருடன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரமேலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
சிறுமியை வன்கொடுமை செய்த 4 சிறார்கள்
மேலும், அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த சிறுவர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த 4 சிறுவர்களும் ஒத்துக் கொண்டனர்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 சிறுவர்கள் கைது
இதை தொடர்ந்து, அந்த சிறுவர்கள் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான நான்கு சிறுவர்களில் 3 பேருக்கு 16 வயது, ஒரு சிறுவனுக்கு 13 வயது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 13 வயது சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!



