மயிலாடுதுறை அருகே கார் மரத்தில் மோதி விபத்து.. கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்.. மருத்துவ மாணவி பலியான சோகம்!
Mayiladuthurai Car Accident : மயிலாடுதுறை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் ( 47 வயது). இவர், தனது மனைவி சங்கீதா, மகன் சத்யராஜ், மகள் ஹரிணி மற்றும் உறவினர்களான லிபியா ஜாய்சி, பிரேமா ஆகியோருடன் தங்களது காரில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சத்யராஜ் ஓட்டிச் சென்றார். காரானது மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவில் – திருவிளையாட்டம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில், காரில் பயணித்த 6 பேரும் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர்கள்
ஆனால், காரின் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கி இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. இது தொடர்பாக, அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்கள் மூலமாக அவர்களை பத்திரமாக மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!




மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த மருத்துவ மாணவி
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஹரிணி ( 20 வயது) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர், சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரியில் 2- ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இதை தொடர்ந்து, மற்றவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மருத்துவ மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து நெரிசல்
இந்த திடீர் சாலை விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையோரம் விபத்துக்குள்ளாகி கிடந்த காரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் போக்குவர்துத தடை பட்டது.
மேலும் படிக்க: “ஊழல் செய்யாமல் வேலை செய்ய வந்துள்ளோம்; கொஞ்சம் டைம் கொடுங்க!”.. அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!