“ஊழல் செய்யாமல் வேலை செய்ய வந்துள்ளோம்; கொஞ்சம் டைம் கொடுங்க!”.. அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!
"நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். மக்களுடன் என்றும் நெருக்கமாக இருக்க வேண்டும், அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எங்கள் குடும்பத்திலேயே யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது, நாங்களும் எந்த மன்னர் பரம்பரையிலிருந்தும் வரவில்லை." என்றார்.
திருச்சி, மே 31: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தற்போது தமிழக அரசின் புதிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றியுள்ளார். “முந்தைய ஆட்சியாளர்களைப் போல நாங்கள் மக்களாகிய உங்களைக் காணாமல் ஓடி ஒளிய மாட்டோம், நாங்களே உங்களைத் தேடி வந்து குறைகளைக் கேட்போம்” என்று அவர் தொகுதி மக்களுக்குப் பகிரங்கமாக உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரமேஷ் மற்றும் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் ஆகியோர் இந்த நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதையும் படிக்க: “திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!
வரலாற்று வெற்றிக்கு நன்றி:
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், “சாதாரண ஒரு சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த உங்கள் வீட்டுப் பிள்ளையான என்னை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். திருச்சி மாவட்டத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் பாசத்திற்கு நான் என்றும் கடமைப்பட்டவன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், இந்த வாக்குகள் அனைத்தும் தமக்காக விழுந்தவை அல்ல, தலைவர் விஜய்க்காக மக்கள் அளித்த வாக்குகள் என்றும், அவருக்கு நன்றியாகவே மக்கள் தங்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“எங்களுக்கு கொம்பெல்லாம் முளைக்கவில்லை”:
தான் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும், தனக்கோ அல்லது மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவனுக்கோ எந்தப் புதிய கொம்பும் முளைத்துவிடவில்லை என்று எதார்த்தமாகப் பேசிய அவர், “நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். மக்களுடன் என்றும் நெருக்கமாக இருக்க வேண்டும், அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் வெறும் மக்கள் சேவகர்கள் மட்டுமே” என்றார்.
கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்:
தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோளையும் வைத்தார். “நாங்கள் இருவரும் முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பத்திலேயே யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது, நாங்களும் எந்த மன்னர் பரம்பரையிலிருந்தும் வரவில்லை. எனவே, அரசுப் பணிகளைக் கற்றுக் கொள்வதற்குக் கொஞ்சம் கால அவகாசம் (டைம்) கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
மக்களை ஏமாற்றாமலும், ஊழல் செய்யாமலும், மக்களைச் சுரண்டாமலும் எவ்வாறு நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்பதையும் நாங்கள் இப்போது கற்றுக் கொண்டு வருகிறோம். நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
பாகுபாடற்ற மக்கள் சேவை:
தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் குறித்தும் பெருந்தன்மையுடன் பேசிய அமைச்சர் ரமேஷ், “ஓட்டுப் போட்டவர்கள், போடாமல் மிஸ் பண்ணியவர்கள் என அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராகவே தளபதி விஜய் செயல்படுகிறார். அவர் எந்தவித பாகுபாடும் பார்க்க மாட்டார். அதே வழியில்தான் நாங்களும் எந்தப் பிரிவினையும் இன்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் பணியாற்றுவோம்” என்றார்.
இதையும் படிக்க: “இருமொழிக் கொள்கை என்பதே இந்த மண்ணுக்கானது” அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்!
“நம்பர் ஒன்” தொகுதியாக மாற்றுவோம்:
ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயில், தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த ‘நம்பர் ஒன்’ தொகுதியாக ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகளை மாற்றிக் காட்டுவோம் என்று சவால் விடுத்த அவர், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி முடித்துவிட்டுத்தான், அடுத்த முறை உங்களிடம் வந்து மீண்டும் ஓட்டுக் கேட்போம்; எதையும் செய்யாமல் வந்து நிற்க மாட்டோம்” என்றார்.