AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இருமொழிக் கொள்கை என்பதே இந்த மண்ணுக்கானது” அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்!

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சேரும் மாணவர்களைப் போலவே ஆங்கில வழியிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்கிறார்கள். இருமொழிக் கொள்கை என்பது இந்த மண்ணுக்கானது, நமது மாணவர்களுக்கானது என்று அவர் கூறினார்.

“இருமொழிக் கொள்கை என்பதே இந்த மண்ணுக்கானது” அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்!
அமைச்சர் ராஜ்மோகன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 May 2026 08:46 AM IST

சென்னை, மே 30: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தற்போதைய அரசின் முதன்மை நோக்கம் என்றும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை என்பது மாணவர்களின் நலனுக்காக இந்த மண்ணோடு பிறந்தது எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாகப் பொறுப்பேற்ற பிறகு தான் போட்ட முதல் கையெழுத்து குறித்துப் பேசிய அமைச்சர், “அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதி, முறையான கதவுகள் உள்ளதா என்பது போன்ற உள்கட்டமைப்பு ஆய்வுகள், குடிநீர் வசதி மற்றும் வகுப்பறை மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு கோப்புகளில்தான் முதல் கையெழுத்திட்டேன். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மாதிரிப் பள்ளிக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!

பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு:

பள்ளி திறக்கப்பட உள்ள சூழலில், உள்கட்டமைப்பு மற்றும் கழிப்பறைப் பராமரிப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால், அவற்றை உடனடியாகத் தொடர்பு கொண்டு சரி செய்வதற்கான தகுந்த கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் உறுதியளித்தார். பேராசிரியர் அன்பழகன் கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பள்ளி உள்கட்டமைப்புக்காக ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இவ்வளவு நிதி செலவழித்த பிறகும் இன்னும் தேவைகள் ஏன் இருக்கின்றன என்பதை நாம் வேர்களில் சென்று மதிப்பீடு செய்ய வேண்டும். திட்டங்களுக்கு இவ்வளவு செலவு செய்தோம் என்று கணக்கு காட்டுவது வெறும் அரசியல் சரிபார்ப்பு மட்டுமே. ஆனால், அந்தத் திட்டத்தால் ஏற்பட்ட தாக்கம் என்ன, இன்னும் என்ன மாற வேண்டும் என்று சிந்திப்பதுதான் வருங்காலத்திற்கான அரசியல்; அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்றார்.

காலை மற்றும் மதிய உணவுத் திட்டம்:

மேலும், காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சாப்பிடுவதாகக் கணக்கு காட்டிவிட்டு, அங்கு 80,000 பேர் மட்டுமே சாப்பிட்டு 20,000 பேரின் கணக்கில் முறைகேடு நடந்தால் அதை இந்த அரசு சகித்துக் கொள்ளாது; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளர்களின் எண்ணிக்கையை 100% துல்லியமாகக் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி எங்களிடம் உள்ளது” என எச்சரித்தார்.

இருமொழிக் கொள்கையும் ஆங்கில வழிக் கல்வியும்:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான அனுமதி மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, “தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சேரும் மாணவர்களைப் போலவே ஆங்கில வழியிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்கிறார்கள். இருமொழிக் கொள்கை என்பது இந்த மண்ணுக்கானது, நமது மாணவர்களுக்கானது. அது எங்களின் டிஎன்ஏ-விலேயே (DNA) இருக்கிறது. ஆங்கிலக் கற்றலில் மாணவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூட, சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிக்க : தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!

ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு:

பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டிஆர்பி-க்கு அவசரக் கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Follow Us