பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? நெஞ்சில் சுட்டு விடுவதாக மிரட்டல்.. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்!
Arumuganeri Inspector Thileepan: தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரிந்து வரும் இன்ஸ்பெக்டர் திலீபன் சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட காவலரின் கணவரை துப்பாக்கியில் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக மாவட்ட எஸ்பி.யிடம் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் காவல் நிலையத்தில் திலீபன் என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதே போல, பெண் போலீசாரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இன்ஸ்பெக்டர் திலீபன் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு உடனடியாக அதனை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த எஸ். எம். எஸ்- ஐ பார்த்த அந்த பெண் போலீஸ் கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தனது கணவரிடம் அந்தப் பெண் காவலர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் திலீபன் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கும், அந்த பெண் காவலர் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த பெண் காவலரை காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் திலீபன் விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெண் காவலர் கணவனை சுட்டு விடுவதாக மிரட்டல்
இது தொடர்பாக தனது கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனால், சற்று ஆத்திரமடைந்த அவரது கணவர் இன்ஸ்பெக்டர் திலீபனை நேரில் சந்தித்தது இந்த விவகாரம் தொடர்பாக தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இப்போது, ஆய்வாளர் திலீபன் காவல் நிலைய துப்பாக்கியை பெண் காவலரின் நெஞ்சில் வைத்து சுட்டு கொன்று விடுவேன். இங்கிருந்து ஓடி விடு என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனக்கு வாட்ஸ் ஆப்பில் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது கணவரை சுட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் திலீபன் மீது தூத்துக்குடி எஸ் பி- அபிஷேக் குப்தாவிடம் அந்தப் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.




மேலும் படிக்க: சிங்கப்பெண் அதிரடிப்படை – 18 காவல்துறையினர் நியமனம்
இன்ஸ்பெக்டர் திலீபன் வெளியிட்ட வீடியோ
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் திலீபன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் கடன் வாங்கி தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் எவ்வளவு நேர்மையானவன் என்று ஊர் மக்களுக்கு தெரியும். என் மீதான குற்றச்சாட்டில் சிறிதளவும் உண்மை கிடையாது. நான் கௌரவத்துக்காகவே காக்கி சட்டை அணிந்து உள்ளேன். அதனை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்.
View this post on Instagram
7 நாள்களுக்குள் ராஜினாமா கடிதம்
இது போன்ற புகார் என் மீது வந்திருக்காது என்று நம்புகிறேன். இந்த புகாரில் இருந்து என் பெயர் விடுபடவில்லை எனில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன். இல்லையென்றால் அடுத்த 7 நாட்களுக்குள் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார். பெண் காவலர் அளித்த பாலியல் புகாரால் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் படிக்க: தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சுட்டுப்பிடிப்பு.. தென்காசி அருகே பரபரப்பு!!