ராஜ்ய சபா இடைத்தேர்தல்… தவெக சார்பில் யார் வேட்பாளர்.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்!
Rajya Sabha Election TVK Candidate; ராஜ்ய சபா இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில், மூத்த நிர்வாகியின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக சி.வி. சண்முகம் இருந்து வந்தார். இவர், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக எம்.பி. பதவியே அவர் ராஜினாமா செய்து உள்ளார். இதன் காரணமாக, மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் ஒரு எம்பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூன் 18- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை ஜூன் 1- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அதிக அளவிலான எம்எல்ஏக்கள் இருப்பதால் ராஜ்யசபா எம்பி பதவியை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும் நிலை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் இந்த தேர்தலில் தவெக எளிதாக வெற்றி பெற்று தனது முதல் எம். பி.யை மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைக்க முடியும்.
எம்பி வேட்பாளரை தேர்வு செய்ய முதல்வர் ஆலோசனை
இதனால், தமிழக வெற்றி கழகத்தின் முதல் எம்.பி. வேட்பாளரை தேர்வு செய்வதற்காக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பெயர்கள் எம். பி. வேட்பாளர்கள் பட்டியலில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: “திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!




விரைவில் வேட்பாளரை தேர்வு குறித்த அறிவிப்பு
இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலங்களவை எம்பி ஆகும் வேட்பாளரை முதல்வர் விஜய் தான் தேர்வு செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நாளை திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 8- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள்
ஜூன் 9- ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று ஜூன் 11-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். இந்த இடைத் தேர்தலில் ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஜூன் 18- ஆம் தேதி வாக்கு பதிவு நடத்தப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க: “ஊழல் செய்யாமல் வேலை செய்ய வந்துள்ளோம்; கொஞ்சம் டைம் கொடுங்க!”.. அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!