தென்காசி – நெல்லையில் அடுத்தடுத்து அரிவாள் வெட்டு.. 2 நாளில் 12 பேர் அதிரடி கைது.. ரவுடி சுட்டுப்பிடிப்பு!
Tenkasi And Nellai Sickle Attack: தென்காசி மற்றும் திருநெல்வேலியில் பொது மக்கள் மீது பயங்கர ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் மீது முகமூடி அணிந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருந்தது. இதே போல, நெல்லை மாவட்டம், மானூரில் இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில், நெட்டூரை சேர்ந்த ரமேஷ், அருள்மாறன், சந்தோஷ் குமார், ராயப்பன் ராம்குமார், மாடசாமி, மானூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், முபாரக் ஆகியோர் மீது அரிவாள் வெட்டு விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் இரு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். சந்தேகிக்கப்படும் மானூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு – 12 பேர் கைது
இதில், நெட்டூரை சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டம், அரசங்குளம் பகுதியில் ரவுடி ஐயப்பன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, காவலர்கள் மீது ரவுடி ஐயப்பன் அரிவாளால் வெட்டினார். இதனால், தற்காப்புக்காக போலீசார் ரவுடி ஐயப்பன் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். அதன்படி, தற்போது வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: ராஜ்ய சபா இடைத்தேர்தல்… தவெக சார்பில் யார் வேட்பாளர்.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்!




நெல்லை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் 4 பேர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஆலங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், ராயப்பன், ராம்குமார், அருள் மாறன் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யகோரியும் ஆலங்குளம்- ரெட்டியார்பட்டி சாலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த முகமூடி கும்பல்
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்வதில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தவாறு வந்த கும்பல் இந்த கொடூர செயலை ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த கும்பலை சேர்ந்த 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: திருச்சி செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்.. விமான நிலையம் முதல் சத்திரம் வரை சாலை வலம்.. நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேச்சு!