கோவை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வாகன ஓட்டிகளே உஷார்.. பாதுகாப்பு குழு நடவடிக்கை!
Coimbatore Airport : கோயம்புத்தூர் விமான நிலையத்தின் நுழைவு வாயில் முன்புறம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி வாகனங்களை நிரந்தரமாக நிறுத்தினால் ரூ.500- க்கு அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று பாதுகாப்பு குழு மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான விமான நிறுவனங்கள் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் விமான பயணிகள் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தின் நுழைவு வாயில் டெர்மினல் பகுதியில் வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்தக் கூடாது. அங்கு பயணிகளை இறக்கி விட்ட பின்னர் வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை யாரும் சரி வர கடைபிடிக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர்- மாநகர ஆணையர் தலையீடு
அதிலும், குறிப்பாக முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் வரும்போது அவர்களை வரவேற்க வருபவர்கள் சிலர் விதிகளை மீறி நுழைவாயில் பகுதி மற்றும் பயணிகள் வெளியே வரும் பகுதிகள் அருகே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றர். இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் விமான நிலைய பாதுகாப்பு குழு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோரின் கவனதுக்கு சென்றது.
மேலும் படிக்க: திருவள்ளுவருக்கு காவி உடை… தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்.. சண்முகம் வலியுறுத்தல்!




நுழைவு வாயில் முன் வாகனம் நிறுத்த தடை
இதைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு வருகை தரும் நபர்களை வரவேற்க வரும் நபர்கள் நுழைவாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு விமான நிலைய பாதுகாப்புக் குழு அதிரடி தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி எவரேனும் வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிப்பது என்பன உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவாயில் பகுதியில் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்த கூடாது.
ரூ.500-க்கு அதிகமான கூடுதல் தொகை அபராதம்
பயணிகளை இறக்கி விட்டதும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதையும் மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினால் ரூ. 500 அல்லது இதற்கு அதிகமான அபராதம் விதிக்கப்படும். ஏற்கெனவே, விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் மற்றும் பிரமுகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? நெஞ்சில் சுட்டு விடுவதாக மிரட்டல்.. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்!