குளிர்பான வடிவில் வந்த எமன்.. தாகத்தை தணிக்க சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.. சிவகிரியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
Sivagiri Elderly Woman Dies: தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். நெல்லை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பனின்றி மரணம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி குருவம்மாள் ( 55 வயது). தம்பதி இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று பகல் பொழுதில் வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் குருவம்மாள் குளிர்பானம் என நினைத்து எலுமிச்சை செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை தெரியாமல் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிறிதளவு மயக்கம் ஏற்பட்ட நிலையில் வீட்டின் படுக்கை அறையில் குருவம்மாள் தூங்க சென்றுள்ளார். அப்போது, அவர் உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்து வந்தார்.
நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதில், வெகு நேரம் ஆகியும் குருவம்மாள் வீட்டில் இருந்து வெளியே வராத காரணத்தால் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, குருவம்மாள் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி முதலுதவி சிகிச்சை மற்றும் அளித்து விட்டு தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. மா.செக்கள் அதிகாரம் அதிரடியாக குறைப்பு? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!




தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த மூதாட்டி
அதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு குருவம்மாள் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறு ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குருவம்மாளின் குடும்பத்தினர் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிவகிரி போலீசார் விசாரணை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குருவம்மாளின் வீட்டுக்கு போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அக்கம்பக்கத்தில் வீட்டில் உள்ள நபர்களிடமும் போலீசார் விசாரித்தனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானம் அருந்தலாம் என எண்ணி தவறுதலாக பூச்சி மருந்தை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி!