10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்.. எப்போது கிடைக்கும்? தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
10 Students Provisional Mark Sheets : தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வருகிற மே 22- ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படுவதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 10- ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை ( மே 20- ஆம் தேதி) வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற மே 22- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண்களில் கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும் பட்சத்தில் விடை தாள் நகல்களை பெறுவதற்கு வருகிற மே 22- ஆம் தேதி முதல் மே 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு – மறு கூட்டலுக்கு கட்டணம்
விடைத்தாள் நகல்களை பெற்ற பிறகு மறுமதிப்பீடு அல்லது மறு மொத்த கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அடுத்த மாதம் ஜூன் 17- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் ஜூன் 19 ( வெள்ளிக்கிழமை) வரை அதற்கான கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வில் தோல்வி அடைந்த அல்லது மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பும் மாணவர்களுக்கான தற்காலிக துணை தேர்வு ஜூலை மாதம் 8- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் ஜூலை 15- ஆம் தேதி ( புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: டெண்டரில் முறைகேடு.. இணையத்தில் வெடித்த சர்ச்சை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!




தற்காலிக துணை தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற மே 26- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் ஜூன் 9- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில், 10- ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது.
திட்டமிட்டபடி வெளியான 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டமிட்டபடி மே 20- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!