‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!
"இன்று உங்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்கள், ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது, குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதைச் சாப்பிட வேண்டும் மற்றும் எதைச் சாப்பிடக் கூடாது எனப் பல தலைப்புகளில் இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஆலோசனைகளையும் பரப்புரைகளையும் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்கள் வழியாகப் பரப்பப்படும் தவறானத் தகவல்கள் மற்றும் போலிப் செய்திகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது ஆழ்ந்த கவலைகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை தற்போதைய காலகட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காக எதையும் அப்படியே நம்பிவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அன்று கூறினார். ஆனால், இன்றோ அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதைத் தாண்டி நாம் முக்கியமாக எதை நம்பக் கூடாது என்றால், அது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களைத்தான்” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: தவெக அமைச்சரவையில் பங்கேற்குமா விசிக?.. திருமாவளவன் சொல்வது என்ன?
‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி’:
மேலும், ‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி’ என்று அழைக்கப்படும் போலித் தகவல் தளங்களைப் பயன்படுத்தி, மக்களின் அடிப்படைச் சிந்தனைப் போக்குகளையே மாற்றி அமைக்கும் ஆபத்தான வேலைகள் இந்தத் தேசத்தில் தொடர்ந்து அரங்கேறி வருவதாக அவர் சாடினார். சமூக வலைத்தளங்கள் வழியாக நல்ல விஷயங்களையும், இயக்கங்களின் சித்தாந்தங்களையும், தங்களின் தனித்துவமான வலிமைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதையெல்லாம் தாண்டி திட்டமிட்டே சில போலி வரலாறுகள் உருவாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் முதல் பெண் அமைச்சர்?
அதற்கு ஒரு முக்கிய உதாரணத்தையும் அவர் முன்வைத்தார்: “தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண் சுகாதாரத்துறை அமைச்சர் இருந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, அம்மையார் சத்தியவாணி முத்து தொடங்கி தொடர்ந்து தமிழ்நாட்டில் அமைந்த அனைத்து அமைச்சரவைகளிலும் பெண்கள் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர். ஆனால், இன்றோ ‘தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சர் தற்போதைய அமைச்சரவையில் தான் உருவாகி இருக்கிறார்’ என்ற முற்றிலும் தவறான ஒரு போலிச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. நான் இதை அரசியலுக்காகச் சொல்லவில்லை; மாறாக வரலாற்றுத் திரிபுகள் எப்படி நிகழ்கின்றன என்பதற்காகக் குறிப்பிடுகிறேன்” என்றார்.
தகவல் யுகமா? தவறான தகவல் யுகமா?
அரசியல் செய்திகளைத் தாண்டி, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. “இன்று உங்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்கள், ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது, குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதைச் சாப்பிட வேண்டும் மற்றும் எதைச் சாப்பிடக் கூடாது எனப் பல தலைப்புகளில் இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஆலோசனைகளையும் பரப்புரைகளையும் வழங்கி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: தவெகவை விடாது துரத்தும் ‘சோபா மாடல்’ விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ.. பரபரப்பு விளக்கம்!
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது ‘தகவல் யுகம்’ என்பதைத் தாண்டி, ‘தவறான தகவல்களின் யுகம்’என்ற ஒரு மோசமான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே, நமக்குச் சமூக வலைத்தளங்கள் வழியாகக் கருத்துக்களைச் சொல்பவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, அந்த ஆலோசனைகளை வழங்குவதற்குக் குறிப்பிட்ட துறையில் அவர்களுக்கு இருக்கும் தகுதி என்ன என்பதைப் பற்றி மக்கள் அனைவரும் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.