AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோட்டையைத் தொடர்ந்து தவெகவின் ‘டெல்லி’ எண்ட்ரி.. முதல்வர் விஜய்யின் புதிய வியூகம்..

சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த கையோடு, நாடாளுமன்றத்திலும் தவெகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் போவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தனித்துவமிக்க "முதல் எம்.பி" பதவியை, கட்சியின் கொள்கைகளை டெல்லியில் உரக்கப் பேசக்கூடிய, டெல்லி அரசியலை நன்கு அறிந்த ஒரு முக்கிய மூத்த நிர்வாகிக்கு வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோட்டையைத் தொடர்ந்து தவெகவின் ‘டெல்லி’ எண்ட்ரி.. முதல்வர் விஜய்யின் புதிய வியூகம்..
முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 May 2026 11:22 AM IST

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தனித்து களம் கண்ட தவெக ஒட்டுமொத்தமாக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற, கொள்கை ரீதியாக ஒத்துப் போகும் முக்கியக் கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடியது. அதன்படி, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்த கூட்டணி ஆட்சி தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!

வரவிருக்கும் இடைத்தேர்தல்:

இதனிடையே, சட்டசபை தேர்தலின் போது தவெக தலைவர் விஜய், பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே அமோக வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளின் எம்எல்ஏவாக நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இதில் மீண்டும் தவெகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

காலியாகும் மாநிலங்களவை எம்.பி பதவி

தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்துக் கொண்டிருக்கும் வேளையில், டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தவெகவுக்கு ஒரு புதிய வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம், அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஏற்கனவே வகித்து வரும் மேல் அவையான மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தமிழ்நாட்டிற்கான அந்த ஒரு எம்.பி இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட நிரப்பலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

டெல்லியில் தவெகவின் முதல் பிரதிநிதி யார்?

மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டசபை எம்எல்ஏக்களின் வாக்குகள் (விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழலில், தமிழக சட்டசபையில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை பலத்துடன் விளங்குவதால், காலியாகும் இந்த ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி எவ்வித சிரமமும் இன்றி தவெகவிற்கே கிடைக்கப் போவது உறுதியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த கையோடு, நாடாளுமன்றத்திலும் தவெகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் போவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தனித்துவமிக்க “முதல் எம்.பி” பதவியை, கட்சியின் கொள்கைகளை டெல்லியில் உரக்கப் பேசக்கூடிய, டெல்லி அரசியலை நன்கு அறிந்த ஒரு முக்கிய மூத்த நிர்வாகிக்கு வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

மாநில அரசியலில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள தவெக, டெல்லி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் தேசிய அளவிலும் தங்களது குரலை ஒலிக்கச் செய்யவுள்ளது. “தவெக-வின் முதல் எம்.பி என்ற அடையாளத்துடன் டெல்லிக்குச் செல்லப் போகும் அந்தப் பிரமுகர் யார்?” என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாநிலத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் தவெக தடம் பதிப்பது அக்கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Follow Us