AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!

"நாம் சொல்லும் தூய்மையான அரசியல் மக்களுக்குப் புரிய இன்னும் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகும். யாரு வேட்பாளர், அவர் என்ன வேலை செய்தார் என்று எதுவும் தெரியாமலேயே ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைக்கிறார்கள். வெறும் வேடிக்கை காட்டுபவர்களையே தலைவனாக ஏற்கும் நிலை உள்ளது" என்று அவர் வேதனை தெரிவித்தார்.

“வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!
சீமான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 May 2026 07:58 AM IST

திமுகவுக்கு தோல்வியும், அவமானமும் நிகழ்ந்ததில் தான் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற ‘தமிழ் பேரின இயக்க எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திமுகவின் வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு அமைந்த விதம் குறித்து அவர் மிகக் காரசாரமான மற்றும் ஆக்ரோஷமான விமர்சனங்களை முன்வைத்தார். அரசியல் களத்தில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலை ஒப்பிட்டு, “சமூகத்திற்காகத் தொடர்ந்து உரக்கப் பேசுகிறவனைத் தள்ளி வைத்துவிட்டு, எதுவுமே பேசாமல் மௌனமாக இருப்பவனை மக்கள் உயர்த்துகிறார்கள்” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க: “10.50 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்”.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!

திமுகவின் தோல்வி குறித்து சீமான் மகிழ்ச்சி:

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த வீழ்ச்சி குறித்து தனது மகிழ்ச்சியைத் துளியும் மறைக்காமல் வெளிப்படுத்தினார். “இந்தத் தோல்வியும், அவமானமும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிகழ்ந்ததில் எனக்குப் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அளிக்கிறது” என்று அவர் மேடையில் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். பல ஆண்டுகாலத் திராவிட அரசியலுக்கு மக்கள் கொடுத்துள்ள சாட்டையடி இது என்றும் அவர் சாடினார்.

தவெக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்:

திமுகவின் வீழ்ச்சியை வரவேற்ற அதே வேளையில், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை நோக்கியும் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிக் கூட்டணி நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார். “உங்களுக்கு திமுக என்ற கட்சி கொள்கை ரீதியாக ஆகாது என்று கூறுகிறீர்கள். ஆனால், அதே திமுகவின் தயவாலும், அவர்களின் வாக்கு வங்கியாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், கட்சியின் எம்எல்ஏக்கள் மட்டும் உங்களுக்கு ஆதரவு அளிக்கலாமா? அவர்கள் உங்களுக்கு வேண்டுமா?” இது என்ன மாதிரியான அரசியல் தத்துவம்? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

தவெக அரசின் வெற்று வாக்குறுதிகள்:

புதிய முதல்வர் விஜய்யின் அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடிய சீமான், “தமிழகத்தில் ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்பது முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் போது தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார். “தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே 3 லட்சம் கோடிதான், அதில் வட்டியே 1 லட்சம் கோடி போகிறது. இந்தச் சூழலில் படிக்கிற இளைஞர்களுக்கு 4,000 ரூபாய், கல்விக்கடன் 20 லட்சம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது நிதி இல்லை என்று கூறுவது மக்கள் துரோகம். கொடுக்க முடியாது என்று தெரிந்தே வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 6 சிலிண்டர்களை எப்படி இலவசமாகக் கொடுக்கப் போகிறார்கள் என்றும் தான் பார்க்கப் போவதாகக் சவால் விடுத்தார்.

மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

ஹிட்லரை மேற்கோள் காட்டிய சீமான்:

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய சீமான், “மக்கள் ஒருபோதும் அறிவுத் தலைமையைத் தேட மாட்டார்கள், கவர்ச்சியை நோக்கித்தான் ஓடுவார்கள். கவர்ச்சியால் உருவாக்கப்பட்ட சமூகம் ஒருபோதும் அறிவுச் சமூகத்தைப் படைக்காது” என்ற ஹிட்லரின் கூற்றை மேற்கோள் காட்டினார். “நாம் சொல்லும் தூய்மையான அரசியல் மக்களுக்குப் புரிய இன்னும் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகும். யாரு வேட்பாளர், அவர் என்ன வேலை செய்தார் என்று எதுவும் தெரியாமலேயே ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைக்கிறார்கள். வெறும் வேடிக்கை காட்டுபவர்களையே தலைவனாக ஏற்கும் நிலை உள்ளது” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

 

Follow Us