“10.50 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்”.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!
திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவதையும், எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்தோடு மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது அப்பட்டமான விஷமத்தனமாகும். புதிய அரசு உடனடியாக இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுகொண்டார்.
முந்தைய திமுக அரசு தமிழகத்திற்குப் பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்று புதிய தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு, முன்னாள் நிதியமைச்சரும் திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அமைச்சர் கீர்த்தனா அடிப்படை அரசியல் புரிதல் இல்லாமல் பேசுவதாக அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய அரசின் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசும்போது, முந்தைய திமுக அரசு தமிழகத்திற்கு சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமையாக வைத்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.. ஈகோவால் கட்சி பலவீனமாகிவிட்டதாக வருத்தம்!!
தங்கம் தென்னரசுவின் அதிரடிப் பதில்:
முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு…
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) May 17, 2026
அமைச்சர் கீர்த்தனாவின் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதற்கு விரிவான கண்டன அறிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள், முந்தைய அரசு பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருப்பது, அவருக்கு அடிப்படை அரசியல் புரிதல் மற்றும் நிதிநிலை குறித்த போதிய அறிவு இல்லை என்பதையே காட்டுகிறது.
சமூக வலைத்தள ஜோடனைகள்:
திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவதையும், எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்தோடு மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது அப்பட்டமான விஷமத்தனமாகும். புதிய அரசு உடனடியாக இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மைக்கு மாறான நிதிக்கணக்குகளைச் சமூக வலைத்தளங்களின் ஜோடனைகள் மூலம் கட்டமைக்கப் புதிய அரசு முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!
திமுக தரப்பு எச்சரிக்கை:
நிதி மேலாண்மை மற்றும் மாநிலத்தின் உண்மையான கடன் சுமை குறித்த தெளிவான தரவுகள் பொதுவெளியில் இருக்கும் போது, புதிய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும், இந்த விவகாரத்தில் புதிய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.