AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.. ஈகோவால் கட்சி பலவீனமாகிவிட்டதாக வருத்தம்!!

"இன்று நிலவி வரும் சுயநல உட்கட்சி சண்டைகளால் ஒட்டுமொத்த அதிமுக-வின் பெயரும், பாரம்பரியமும் பொதுவெளியில் அசிங்கப்படுகிறது. பிரபல ஆங்கில நாளிதழ்கள் கூட அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்துப் பரிகாசம் செய்யும் அளவிற்கு கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது" என்று தற்போதைய தலைமை மீதான தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.. ஈகோவால் கட்சி பலவீனமாகிவிட்டதாக வருத்தம்!!
செம்மலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 May 2026 10:57 AM IST

தமிழக அரசியல் களம் தற்போதைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில்,  அதிமுக மேலும் ஒரு பலத்த சறுக்கலாக, கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், கட்சித் தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான ராஜினாமா கடிதம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “நான் முதலமைச்சர், இபிஎஸ் துணை முதல்வர்”.. கடைசி நிமிடத்தில் வந்த போன்கால்.. ரகசியம் உடைத்த திருமாவளவன்!!

தொண்டர்களும் வேதனையில் உள்ளனர்:

தனது விலகல் கடிதத்தில் அதிமுக-வின் தற்போதைய நிலவரம் குறித்து மிகுந்த கவலையைப் பகிர்ந்துள்ள செம்மலை, “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிகழ்வுகள் எனது மனதை மிகக் கடுமையாகப் பாதித்து, மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளது. நான் மட்டுமன்றி, எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்த இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து, இதற்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து உழைத்த லட்சக்கணக்கான உண்மைத் தொண்டர்களும் இதே மனநிலையில் தான் வேதனையோடு இருக்கிறார்கள்.

இந்த கதிதானா நேரிட வேண்டும்?

கட்சியில் அண்மைக்காலமாக நடந்த சம்பவங்களும், தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் எள்ளளவும் திருப்தி அளிப்பதாக இல்லை; மாறாக நாளுக்கு நாள் கவலையை மட்டுமே கூட்டுவதாக உள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கி, புரட்சித்தலைவி அம்மா பல்வேறு சோதனைகளைக் கடந்து கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிய பேரியக்கத்திற்கு இப்போது இந்த கதிதானா நேரிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மனசு நோகுதய்யா:

கட்சியின் தற்போதைய உட்கட்சி மோதல்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா” என்ற வரிகளை மேற்கோள் காட்டி, இது தனது தனிப்பட்ட உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் உள்மனதின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இன்று நிலவி வரும் சுயநல உட்கட்சி சண்டைகளால் ஒட்டுமொத்த அதிமுக-வின் பெயரும், பாரம்பரியமும் பொதுவெளியில் அசிங்கப்படுகிறது. பிரபல ஆங்கில நாளிதழ்கள் கூட அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்துப் பரிகாசம் செய்யும் அளவிற்கு கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது” என்று தற்போதைய தலைமை மீதான தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

தலைமைக்குக் கட்டுப்பட்டேன்:

மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தனக்குத் தந்த அங்கீகாரத்தை நினைவுகூர்ந்த செம்மலை, “புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் எனக்கு எவ்வளவோ அரசியல் வாய்ப்புகளை வழங்கியதோடு, தமிழக அரசியலில் எனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அவர்கள் எனக்குச் செய்த நன்றிக்காகவும், அந்த இருபெரும் ஆளுமைகளின் புகழுக்கு என்றும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவும் மட்டுமே, எனது நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கட்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தவித சுயநலமுமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

வாய்ப்புகள் திட்டமிட்டு மறுப்பு:

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, இந்த புதிய தலைமையில் எனக்குப் பல வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டன; பல இடங்களில் நான் முடக்கப்பட்டேன், தடுக்கப்பட்டேன். அதைப்பற்றி கூட நான் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. எனது தனிப்பட்ட ஆதங்கங்களை ஒருபோதும் பொதுவெளியில் வெளிக்காட்டிக்கொள்ளாமல், இயக்கத்தின் ஒழுங்கு கருதி தலைமைக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகத் தொடர்ந்து பணியாற்றி வந்தேன்” என்று தனது அரசியல் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்:

தற்போதைய சூழலில் கட்சியில் நீடிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், “மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் தமிழக அரசியல் வானில் பயணித்த அந்த பொற்காலத்தை நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். ஆனால், இப்போது கட்சியில் உருவாகியுள்ள சுயநலச் சூழ்நிலைகளையும், நெறிமுறையற்ற நகர்வுகளையும் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தில் என்னால் தொடர்ந்து பயணிக்க என் மனம் எவ்விதத்திலும் இடம் தரவில்லை. என் மனம் மிகக் கடுமையாக வேதனைப்படுகிறது.

இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு.. இபிஎஸ்-க்கு புதிய நெருக்கடி!!

அரசியல் வானில் என்னை அடையாளம் காட்டி, ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த எனது மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுக்கும் இந்த இறுதி முடிவுக்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன். மிகுந்த கனத்த இதயத்தோடும், ஆழமான வருத்தத்தோடும் நான் தற்போது அதிமுக-வில் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகிக்கொள்கிறேன்” என்று தனது கடிதத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Follow Us