Tamil Nadu SSLC Result 2026: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி.. முழு விவரம்..
Tamil Nadu SSLC 10th Class Results 2026: மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தங்களின் பதிவெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் அண்மையில் நடந்து முடிந்த 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள கோட்டூர்புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற முக்கியச் செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை முறைப்படி வெளியிட்டார். மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வை, தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: SSLC Class 10 results 2026: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
தேர்வு முடிவுகளை அறியும் வழிமுறைகள்:
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தங்களின் பதிவெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக உடனடியாக அறிந்து கொள்ளலாம். இணையதளம் தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்களுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகத் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்:
10ம் வகுப்பு பொதுதேர்வில் 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 8,21,105 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில், வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 96.47% மாணவிகளும், 92.15% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 4,35, 247 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 4,19,891 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், 4,35,396 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 4,01,214 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:
இதில் 1,931 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத் தேர்வெழுதிய 370 சிறைவாசிகளில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முக்கியமாக பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சியை பொறுத்தவரையில், அரசுப் பள்ளிகள் 91.86% தேர்ச்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34% தேர்ச்சி, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%, இருபாலர் பள்ளிகள் 94.42%, பெண்கள் பள்ளிகள் 96.42%, ஆண்கள் பள்ளிகள் 88.50% பள்ளிகள் தேர்ச்சியை கண்டுள்ளன.
இதில் பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92% கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.92% கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் – 98.43%, ஆங்கிலம் – 99.44, கணிதம் – 97.36%, அறிவியல் – 98.00%, சமூக அறிவியல் – 97.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழில் 34 பேர், ஆங்கிலத்தில் 92 பேர், கணிதத்தில் 3,194 பேர், அறிவியலில் 10,476 பேர், சமூக அறிவியலில் 3,336 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.