AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த உறவினர் கொலை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவை துடியலூர் அருகே மது குடிக்கப் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டி வந்த உறவினரை, இரும்புத் தட்டு மற்றும் விறகுக் கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கொலையாளி கண்ணன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.

குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த உறவினர் கொலை  – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குற்றவாளி கண்ணன்
Sekaran S
Sekaran S | Published: 02 Jun 2026 21:31 PM IST

கோயம்புத்தூர், ஜூன் 2 : கோவை துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் . இவர் உள்ளூர் எரிவாயு  நிறுவனம் ஒன்றில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். குடும்பப் பிரச்னை காரணமாகத் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டுத் தனியாக வசித்து வந்த பத்மநாபன், கடந்த சில காலமாகக் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது நெருங்கிய உறவினரான கண்ணன் என்பவரது தோட்டத்து வீட்டிற்குச் சென்று தங்கி, அங்கு இருந்து வேலைக்குச் சென்று வந்து உள்ளார்.

​குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த பத்மநாபன், மது குடிப்பதற்குப் பணம் கேட்டுத் தனது உறவினர் கண்ணனையும், அவரது வயதான தாயாரையும் அடிக்கடி தொந்தரவு செய்து, வீட்டில் பெரும் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இதையும் படிக்க : திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை – நகைகள் பறிப்பு

​விறகுக் கட்டையால் அடித்துக் கொலை

​இந்நிலையில், சம்பவத்தன்று குடிக்கப் பணம் கொடுக்காவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவதாகப் பத்மநாபன் கொடூரமாக மிரட்டி உள்ளார். இதனால், பத்மநாபன் மீது கண்ணனுக்குக் கடுமையான வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பகல் நேரத்தில், கண்ணனின் வீட்டுக்கு மீண்டும் வந்த பத்மநாபன், கத்தியபடி குடிக்கப் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

​இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கண்ணன், வீட்டில் இருந்த கனமான இரும்புத் தட்டை எடுத்து பத்மநாபனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அருகில் இருந்த விறகுக்கட்டையை எடுத்து அவரது தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

​கொலை செய்த பின்னர், தான் போலீஸில் சிக்கிவிடக் கூடாது என்று திட்டம் தீட்டிய கண்ணன், பத்மநாபனின் உடலை அங்கிருந்து இழுத்துச் சென்று அருகில் உள்ள பாறைப் பகுதிக்குக் கொண்டு சென்றார். அவர் தவறி விழுந்து பாறையில் முட்டி இறந்தது போல் போலீஸாரை நம்ப வைப்பதற்காக, பத்மநாபனின் தலையில் ஒரு பெரிய கருங்கல்லைப் போட்டு விட்டு அங்கிருந்து நைசாகத் தப்பி ஓடி விட்டார்.

இதையும் படிக்க : கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!

​இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த துடியலூர் போலீஸார் தீவிர விசாரணை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில், அது விபத்து அல்ல. திட்டமிட்ட கொடூரக் கொலை என்பதை உறுதி செய்து கொலையாளி கண்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

​இதுதொடர்பான கொலை வழக்கு விசாரணை, கோவை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கடந்து வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் மோகன் பிரபுவின் வலுவான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி சிவக்குமார், குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்குப் பத்மநாபனைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி கண்ணன் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us