கோவையில் குப்பை கிடங்கால் மாசடைந்த நிலத்தடி நீர்.. மஞ்சள் நிறமாக மாறிய கிணற்று நீரால் பொதுமக்கள் அவதி!
Trash Dumping Leads Ground Water Polluted | கோயம்புத்தூரி உள்ள ஒரு குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர், நிலத்தில் கலந்து நிலத்தடி நீரை அசுத்தமாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் நீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெள்ளலூர், ஜூன் 02 : கோயம்புத்தூரில் (Coimbatore) உள்ள வெள்ளலூர் பகுதியில் கிணற்று நீர் தொடர்ந்து மஞ்சளாக மாறி வருவது அந்த பகுதி மக்களுக்கு தொடர் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சிக்கல் நீடித்து வருவதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மாசு படிந்துள்ள நீரை சுத்தமாக மாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூரில் குப்பையால் மாசடைந்த நிலத்தடி நீர்
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், குப்பைக்கிடங்கு பகுதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு நீர் பாய்ச்ச கிணறு ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை – நகைகள் பறிப்பு




இந்த நிலையில், குப்பை கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர், மேலும் மழையால் வெளியேறும் மாசுபடிந்த நீர் ஆகியவை மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீருடன் கலப்பதால் அந்த கிணற்றில் அவ்வப்போது நீர் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. இந்த சிக்கல் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்த முறை மிகவும் மோசமடைந்த நிலையில், மஞ்சள் நிறத்தில் காணப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே இங்கு கிடைக்கும் நீரை குடிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே இருந்து தான் தண்ணீரை எடுத்து வரவேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த குப்பை கிடங்கு விரைவில் அகற்றப்பட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.