இனி சென்னையில் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் – ரூ.530 கோடியில் மாபெரும் திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரூ.530 கோடியில் உருவாகும் இந்த திட்டத்தின் மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
சென்னை, ஜூலை 28 : சென்னையில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலால் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரூ.530 கோடியில் மாபெரும் திட்டம்
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் அறிவுசார் போக்குவரத்து அமைப்பு எனப்படும் நவீனத் தொழில்நுட்ப திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் ரூ.530 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!




அதில் சென்னை போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிகளை மீறுவோரைக் கண்டறியவும் நகரின் முக்கியச் சந்திப்புகளில் பல்வேறு அதிநவீனத் தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தானியங்கி சிக்னல் அமைப்பு
வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிக்னல் நேரத்தை மாற்றியமைக்கும் விதமாக தானியங்கி சிக்னல் அமைப்பு 101 சந்திப்புகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுத் தற்காலிகக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்னலை மீறிச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் அமைப்பு 25 இடங்களிலும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு 3 இடங்களிலும் பொருத்தப்பட்டுச் சலான் அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 7 இடங்களில் இது நிறுவப்படும்.
நகரின் முக்கிய 47 மேம்பாலங்களில் விபத்துகளை உடனடியாய்க் கண்டறிந்து அவசர உதவி வழங்கிடும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தகவல் பலகைகள் மாற்றுப் பாதைகள் மற்றும் நேரலைச் செய்திகளைப் பயணிகளுக்குத் தெரிவிக்க 3 இடங்களில் நவீன மின்னணுத் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
சென்னை மக்களுக்குச் சிறந்த பேருந்து போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதற்காக எம்டிசி பேருந்து சேவைகள் நவீனமாக்கப்படவுள்ளன. மொத்தம் 3,500 மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் சார்ந்த கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் வரும் நேரத்தைக் துல்லியமாகக் காட்டும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 32 பேருந்து பணிமனைகளின் செயல்பாடுகள் முழுமையாக கணினிமயமாக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப ரீதியாகச் சாதனங்களைப் பொருத்துவதில் சிக்கல் உள்ள இடங்களில் மாற்று இடங்கள் கண்டறியப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், மின் இணைப்புகள் வழங்குவது மற்றும் சந்திப்புகளைச் சீரமைப்பது போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.