காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!
Karaikudi Bill Collector Arrested: காரைக்குடி மாநகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக அதன் உரிமையாளரான ஒரு பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பில் கலெக்டரை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சரவணன் ( 45 வயது) என்பவர் பில் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், காரைக்குடி மாநகராட்சி வார்டு 4 மற்றும் 5 மற்றும் இலுப்பக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் வரி வசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், பேயன்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு சொத்து வரி செலுத்துவது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் பில் கலெக்டர் சரவணனிடம் தகவல் கேட்டுள்ளார். அதற்கு, சரவணன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது, பில் கலெக்டர் சரவணன் இரு தொகையாக பிரித்து வழங்குமாறு தெரிவித்துள்ளார். இதனால், கட்டாயத்தின் பேரில் அந்த பெண் ரூ.10 ஆயிரத்தை இரு தவணைகளாக வழங்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது.
லஞ்ச பணத்தை தருமாறு பெண்ணை வற்புறுத்தல்
அதன்படி, முதல் கட்டமாக ரூ.6 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக அந்த பெண் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை வழங்கினால் தான் புது வீட்டுக்கான வரியை நிர்ணயம் செய்ய முடியும் என்று பில் கலெக்டர் சரவணன் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால், அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க:கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து.. மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!




பில் கலெக்டரை கைது செய்த போலீசார்
அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த பெண்ணிடம் அளித்து, பில் கலெக்டர் சரவணனிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி, அந்த பெண்ணும், சரவணனிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளார். இதனை, பில் கலெக்டர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வங்கி கணக்கு- ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஆய்வு
இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பில் கலெக்டரின் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!