தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
Chennai Double Murder : சென்னை மாவட்டத்தில் ரூ. 1 கோடி சொத்துக்காக தாய் மற்றும் இளைய சகோதரரை கழுத்தை நெறித்து கொலை செய்து நாடகம் ஆடிய இருவரை அண்ணா நகர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், அண்ணா நகர் கிழக்கு 1- ஆவது அவென்யூவில் வசித்து வருபவர் அஷ்ரப் நிஷா. இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தனது 3 மகன்களுடன் ஒரே வீட்டில் அஷ்ரப் தனியாக வசித்து வந்தார். இதில், அஷ்ரப்பின் 3- ஆவது மகன் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், இவரது அண்ணன்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது ஆகியோர் இடையே நீண்ட நாட்களாக ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சொத்து விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை இரவு அவர்களுக்குள் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், தாய் அஷ்ரப் நிஷா, 3- ஆவது மகன் அஷ்ரப் அகமது ஆகிய இருவரையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் இருவரையும் கழுத்தை நெறித்துள்ளனர்.
தாய் – தம்பியை கொலை செய்து நாடகம்
இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அண்ணன்கள் இருவரும் அக்கம், பக்கத்தினரிடம் தனது தாய் மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்து நாடகமாக உள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவிய நிலையில், போலீசாரின் கவனத்துக்கு சென்றது. அதன் பேரில், அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: நாகர்கோவில் சபரிவர்மன் சிறை மரணம்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!




போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதில்
அண்ணா நகர் துணை ஆணையர் ஈஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக சகோதரர்கள் இருவரும் தெரிவித்தனர். இதில், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அவர்கள் அளித்த பதிலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதன் காரணமாக அஷ்ரப் நிஷா மற்றும் அஷ்ரப் அகமது ஆகியோரின் சடலங்களை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்டவர்களின் உடலில் காயம்
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் இருவரது உடல்களில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சகோதரர்கள் இருவரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்ததை அவர்கள் ஒத்துக் கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம்?.. கொத்துக் கொத்தாகப் பலி.. கோவையில் அதிர்ச்சி!!