நாகர்கோவில் சபரிவர்மன் சிறை மரணம்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
Sabarivarman Murder Case: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற கைதியின் மரணம் தொடர்பாகச் சிபிசிஐடி தனிப்படை போலீசார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நபர்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இதில், சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டி வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
நாகர்கோவில், ஜூலை 31: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன். இவர் தனது வீட்டின் அருகே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
மேலும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
குட்கா வழக்கு கைது:
கடந்த ஒன்பதாம் தேதி, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகத் தென்தாமரைகுளம் காவல்துறையினரால் சபரிவர்மன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குள் அரங்கேறிய கொடூரம்:
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட சபரிவர்மன், அங்குள்ள சிறைக் காவலர்கள் மற்றும் சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 சிறைக் காவலர்கள் மற்றும் 8 சக கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் நாங்குநேரி சிறையிலும், கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி சஜிதா தலைமையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி சிபிசிஐடி தனிப்படை போலீசார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நபர்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்:
சிறையின் உட்பகுதியில் வைத்து சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் இறுக்கமாகக் கட்டி வைத்து கொடூரமாக அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். இந்தச் சித்திரவதையின் காரணமாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தற்போது சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாகர்கோவில் சிறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் சிறை துணை ஜெயிலராக இருந்த சம்பத் உடனடியாகப் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகப் பாளையங்கோட்டை சிறையின் துணை ஜெயிலராக இருந்த பழனி ராஜன், நாகர்கோவில் சிறை துணை ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?
புதிய காவலர்கள் நியமனம்: கைது செய்யப்பட்ட 3 சிறைக் காவலர்களுக்குப் பதிலாகப் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 3 புதிய சிறைக் காவலர்கள் நாகர்கோவில் சிறைக்கு மாற்றப்பட்டு இன்று அல்லது நாளை பொறுப்பேற்கவுள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தச் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.