“முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதலில் மின்வெட்டுப் பிரச்சனை நிலவிய நிலையில், தற்போது மின்கட்டண உயர்வு பிரச்சனை தலைதூக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வந்திருப்பதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை, ஜூலை 31: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலில் மின்வெட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்ட பொதுமக்கள், தற்போது கடும் மின்கட்டண உயர்வால் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகியிருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: கட்டணத்தைக் குறைக்காத தனியார் பள்ளிகள்.. அமைச்சர் ராஜ்மோகன் போட்ட அதிரடி உத்தரவு!!
இப்போது மின்கட்டண உயர்வு:
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்…
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… https://t.co/6FubNiIFPa
— M.K.Stalin (@mkstalin) July 31, 2026
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சீரற்ற மின் விநியோகம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சனைகளால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மின்வெட்டுப் பிரச்சனைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படாத நிலையில், தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு எதிர்பாராத வகையில் மிக அதிக அளவில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
3.70 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு:
கடந்த மே மாதக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வீடுகளுக்கான மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் சமூக வலைதளங்களிலும் நேரடியிலும் தொடர் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். மாநிலத்தில் சுமார் 3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது என்பதை மின்சாரத் துறையும் அரசே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் கடும் அவதி:
சாதாரண நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவை முற்றிலும் முடக்கும் வகையில் இந்த மின்கட்டண உயர்வு அமைந்துள்ளது என்றும், இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்குத் தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..
உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:
அடிப்படைக் கட்டமைப்புகளைச் சரிசெய்யாமலும், மின் கட்டணக் கணக்கீட்டு முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் மக்களைத் துயரத்திற்கு ஆளாக்கி வரும் அரசு, உடனடியாக இந்த கூடுதல் மின்கட்டணப் பிரச்சனையைச் சரிசெய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் விலக்கு அளிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.