5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதேசமயம், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 31, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல், சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 31ஆம் தேதி கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்:
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் தேதியான நாளை கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலோரத் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை:
மழை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: சிவப்பு + மஞ்சள் சேர்ந்தால் கிடைப்பது காவி.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதேசமயம், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.