மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்… பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து விஜய் கோரிக்கை!
TVK Leader Vijay Thanks Modi And Rahul: தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 1.58 கோடி வாக்குகளுடன் 108 சட்டமன்ற தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்ற கழகம் 73 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 53 தொகுதிகளுடன் அதிமுக 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்த கட்சியின் தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்கள் வாயிலாக நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தை குறிப்பிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தமைக்காக வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்
மக்கள் நலனை மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மாநிலத்தின் முன்னேற்றத்திலும், தமிழக மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம். இதற்காக தமிழக வெற்றி கழகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்று விஜய் தெரிவித்துள்ளார். இதே போல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: சகோதரர் விஜய்க்கு வாழ்த்து.. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாதக செயல்படும்.. சீமான்!




ராகுல் காந்திக்கு எனது உளமார்ந்த நன்றிகள்
இந்த வாழ்த்தை குறிப்பிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களவையின் மதிப்பிற்கு உரிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவித்த இனிய நல்வாழ்த்துக்கள் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொது சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களை பேணி காப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம்.
தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து
எனவே, அரசியல் பொது வாழ்வுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அதில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்தக் கட்சியின் தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.