தேர்தல் தோல்வி.. திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!
Puducherry V. Narayanasamy : புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி தோல்வியை திராவிட முன்னேற்றக் கழகம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார். தவெக கூட்டணியை தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி தோல்வி தொடர்பாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை ஏற்று உள்ளோம். கூட்டணி கட்சியை சேர்ந்த சிலர் காங்கிரஸ் மீது தோல்விக்கு பழி போட்டு வருகின்றனர். கூட்டணி தலைவர்களின் பேராசை காரணமாகவே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். தொகுதி பங்கீடு பிரச்சனை, காலதாமதம் ஆகியவை ஒரு காரணமாகும். காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டதாக சிலர் குறை கூறுகின்றனர். புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வெல்லும் தொகுதிகளில் தவெக கணிசமான வாக்கு பெற்றதால் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரசை விமர்சிப்பது புதுச்சேரி மக்களை விமர்சிப்பதற்கு சமமாகும். தோல்விக்கான காரணம் என்ன என்பதை திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
பிற கட்சிகளும் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதால் அவர்களின் தவறை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு ஒரு சில தலைவர்களை மிகப் படுத்தி பேசி அழுத்தம் தந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் கையில் இருந்த ஆட்சி பறிபோயுள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றது போல, இதர கட்சிகளும் பெருந்தன்மையோடு பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியில் சில கட்சிகள் சேர்வதும், பிரிவதும் அரசியலில் நடக்கும் சாதாரணமானது தான்.
மேலும் படிக்க: கர்நாடகத்திடம் தண்ணீருக்காக தமிழகம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.. நாதக சீமான் சீற்றம்!




தோல்விக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்
இதற்காக காங்கிரஸ் கட்சியை திமுகவினர் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு பேசினால் இரு கட்சியினர் இடையே தேவையில்லாத மனக்கசப்பு ஏற்படும். எனவே, அரசியல் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வெறுப்பு இருக்கக் கூடாது. தாங்கள் புனிதர்கள் போலவும், காங்கிரஸ் துரோகம் செய்தது போலவும் மக்கள் மத்தியில் பிரம்மையை ஏற்படுத்தக் கூடாது. யாருடைய பேராசையின் காரணமாக ஆட்சியை இழந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.
தவெகவுடன் கூட்டணியை தலைவர்கள் முடிவு செய்வார்கள்
புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அதில் ஈடுபட்ட தலைவர்கள் தான் தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். கூட்டணி கட்சித் தலைவர்களின் தவறான அணுகு முறையால் தான் தோல்வி ஏற்பட்டது என்பதை உணர வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இண்டியா கூட்டணி உள்ளதா என்பது முடிவெடுத்த பின்னர் தெரிவிக்கப்படும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது மற்றும் தவெகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!