பழுதாகி நின்ற லாரி… படுவேகத்தில் வந்த ஆம்னி பேருந்து.. அடுத்து நடந்த கொடூர விபத்து.. தீவிர சிகிச்சையில் 20 பேர்!
Kovilpatti Omni Bus Lorry Accident: கோவில்பட்டியில் சாலையோரம் பழுதாகி நின்ற சிமெண்ட கலவை லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது இன்று வியாழக்கிழமை ( மே 28) அதிகாலை கோவில்பட்டி, மூப்பன்பட்டி விளக்கு அருகே சென்ற போது, அந்த பகுதியில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கி என்பவர் ஓட்டி வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில், லாரியின் பின்பகுதியில் எச்சரிக்கை குறியீடு எதுவும் இல்லாத நிலையில், வேகமாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சரவணன் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.
சம்பவட இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் – தீயணைப்பு படையினர்
மேலும், பேருந்தில் பயணம் செய்த 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: திருவாரூர் அதிர்ச்சி: அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் சடலத்தை கடித்த எலிகள்!




வாகன இடிபாடுகளுக்குள் இருந்து ஓட்டுநர் மீட்பு
வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் நவீன கருவிகள் மூலமாக பேருந்தின் பாகங்களை வெட்டி அதன் ஓட்டுனர் சரவணனை மீட்டனர். மேலும், காயமடைந்த பயணிகளையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
மேலும், சாலையில் விபத்துக்குள்ளான சிமெண்ட் கலவை லாரி மற்றும் ஆம்னி பேருந்து ஆகியவற்றை கிரேன் மூலமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிமெண்ட் கலவை லாரியின் ஓட்டுநர் சரவணன் மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வைகாசி விசாகம் : சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு