AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி.. உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!

திமுக எப்போதும் அதிமுகவை மட்டுமே பிரதான எதிரியாகப் பார்த்து அரசியல் பணிகளைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட நேரு, "அதிமுகவைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் (தவெக) இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகக் கூட்டமைப்பு மூலமாக நேரடியாக குடும்பங்களுக்குள் சென்று சேர்ந்து வாக்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றார்.

“திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி..  உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!
கே.என்.நேரு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 May 2026 07:27 AM IST

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் திமுக-வின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கட்சி நிர்வாகிகள் மத்தியில் மனம் திறந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற கொள்கை ரீதியான காரணத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தந்து சென்றிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அமைச்சர் பொறுப்பை நோக்கிச் சென்றுவிட்டார்கள். அதேபோல், காங்கிரஸ் கட்சி நம்மோடு இருந்த போதெல்லாம் நமக்கு பெரிய சங்கடங்களை ஏற்படுத்திவிட்டு, நம்மை முதலிலே கழட்டிவிட்டுச் சென்றுவிட்டது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை

தவெகவின் அசுர வளர்ச்சியும் திமுக-வின் பின்னடைவும்:

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் தவெகவிற்கும், திமுகவிற்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் வாக்குகள் மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் கள நிலவரம் குறித்து அவர் பேசுகையில், தேர்தல் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட போது தவெக 10% முதல் 15% வாக்குகளைப் பெறும் என்றே சர்வேக்கள் கூறின. ஆனால், கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பாக அது 27% முதல் 28% ஆக உயர்ந்து, இறுதி நாட்களில் 30% முதல் 35% வரை வந்துவிட்டது.

இது திமுகவின் வாக்கு வங்கிக்கு (30% – 32%) மிகச் சரிசமமாக ஈடான ஒரு வளர்ச்சியாகும். வெறும் 15 நாட்களுக்குள், குறிப்பாக கடைசி மூன்று நாட்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் வீசிய ஒரு அலை போன்ற மாறுதலால் தான் தி.மு.க இந்த வெற்றி வாய்ப்பை இழந்தது. வெறும் 1000 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 27 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 24 இடங்களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம்.

தவெக கையாண்ட இன்ஸ்டாகிராம் தந்திரம்:

திமுக எப்போதும் அதிமுகவை மட்டுமே பிரதான எதிரியாகப் பார்த்து அரசியல் பணிகளைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட நேரு, “அதிமுகவைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் (தவெக) இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகக் கூட்டமைப்பு மூலமாக நேரடியாக குடும்பங்களுக்குள் சென்று சேர்ந்து வாக்குகளைப் பெற்றுவிட்டார்கள். அவர்கள் கையாண்ட தந்திரம் மிகப்பெரியது. இடைப்பட்ட நேரத்தில் நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்று வந்துவிட்டார்கள்” என ஒப்புக்கொண்டார்.

அதிமுக-வின் எதிர்காலம் என்ன?

அதிமுக-வின் வாக்குகள் இனி எந்தப் பக்கம் போகும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது என நேரு தெரிவித்தார். உதாரணத்திற்கு, திருச்சி மேற்கு தொகுதியில் திமுக 81,000 வாக்குகளும், தவெக 86,000 வாக்குகளும் பெற்ற நிலையில், அதிமுக கூட்டணி 13,000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. வரும் தேர்தல்களில் இந்த வாக்குகள் பாதியாகக் குறையுமா அல்லது எந்தப் பக்கம் நகரும் என்ற அரசியல் கணக்குகள் இருப்பதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க: ‘திருப்பத்தூர் தொகுதி ஒரு ஓட்டு விவகாரம்’.. முன்னாள் அமைச்சரின் அவசர மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கட்சியை மீட்டெடுக்க கலைஞர் பிறந்தநாள் உத்தி:

தேர்தல் முடிவுகளால் சுணங்கிப் போயிருக்கும் கழகத் தோழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கலைஞரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு மத்திய மற்றும் கிளைச் செயலாளர்களும் கட்சித் கொடியை ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். “கலைஞர் கலைஞர் என்று சொன்னால்தான் திமுக மீண்டும் வளர முடியும்” என்று அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

Follow Us