தவெக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை.. மீறினால் பதவி பறிக்கப்படும்.. என்.ஆனந்த் மிரட்டல் பேச்சு!
TVK General Secretary N Anand : தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் யாரும் ஊழலில் ஈடுபட்டால் அவர்களின் பதவி அடுத்த வினாடியே பறிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்தார் .
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் மாற்று அரசியல் மற்றும் மாற்று ஆட்சியை தருவோம் என்று கூறியிருந்தார். அதன்படி, எங்களது ஆட்சியில் ஊழல் இருக்காது எனவும், ஊழலில் ஈடுபட முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை அருகே உள்ள பனையூரில் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் பேசியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழல் செய்தால் அடுத்த வினாடி பதவி பறிப்பு
ஏனென்றால் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழலில் ஈடுபட்டால் அடுத்த வினாடியே எங்கள் மீது முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுத்து விடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, நாங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்யவும் வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வருகின்ற பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
மேலும் படிக்க: 43 ஆகக் குறைந்த அதிமுக பலம்… உட்கட்சி பூசலால் 4 MLAக்கள் இழப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!




தவெகவில் இணைந்தவர்களுக்கு உரிய மரியாதை
மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் அதற்கு துறை அமைச்சர்கள் நிவர்த்தி செய்து கொடுப்பார்கள். மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. இதே மரியாதை எதிர்காலத்திலும் வழங்கப்படும் என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊழல் இல்லாத தவெக ஆட்சி
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மாநாடு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம். நான் முதல்வராக பதவியேற்றாலும் ஊழலில் ஈடுபட மாட்டேன். மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. மற்றவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன் என்று விஜய் தெரிவித்து இருந்தார். இதே போல, முதல்வர் பதவியேற்பு விழாவிலும் எனது தலைமையின் கீழ் ஒரே அதிகாரம் தான் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. அதிமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி!!