“ராகுல், சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்?”.. காங்கிரஸ் எம்பி கொடுத்த விளக்கம்!
இப்படியான ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் வேலைப் பளுவுக்கு மத்தியில், தமிழக முதலமைச்சருடன் அமர்ந்து நிதானமாக, அரசியல் பேச முடியாது. அவ்வாறு காங்கிரஸ் தலைவர்களுடம் உரிய நேரம் செலவிட முடியாததால், இன்று நடைபெற இருந்த சந்திப்பை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கலாம்.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை ஏன் சந்திக்கவில்லை என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்தவகையில், விஜய்யின் டெல்லி விசிட் குறித்துப் பேசிய எம்.பி கிறிஸ்டோபர் திலக், “தமிழக முதலமைச்சர் விஜய் தனது டெல்லி பயணத்தை முழுக்க முழுக்க ஒரு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாக தெரிகிறது. அதன் காரணமாகவே, அவர் நாட்டின் பிரதமரை மட்டும் நேரில் சந்தித்துவிட்டுத் தமிழகம் திரும்பியுள்ளார்” என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிக்க: “ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள்”.. சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா!!
ஜூன் 11-ல் மீண்டும் டெல்லி வரும் முதல்வர் விஜய்:
காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பது எப்போது என்பது குறித்துப் பேசிய அவர், “அடுத்ததாக வரும் ஜூன் 11-ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லிக்கு வரவிருக்கிறார். அந்தப் பயணத்தின் போது அவர் கண்டிப்பாகச் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்துப் பேசுவார்” என்று உறுதியளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நெருக்கடிகள்:
தற்போதைய சூழலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சில முக்கிய ஆலோசனைகள் நடந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு மற்றும் அது தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்த உள் கட்சி விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
உரிய நேரம் செலவிட முடியாததால் ரத்து:
இப்படியான ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் வேலைப் பளுவுக்கு மத்தியில், தமிழக முதலமைச்சருடன் அமர்ந்து நிதானமாக, அரசியல் பேச முடியாது. அவ்வாறு காங்கிரஸ் தலைவர்களுடம் உரிய நேரம் செலவிட முடியாததால், இன்று நடைபெற இருந்த சந்திப்பை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கலாம். அதோடு, காங்கிரஸுடன் தவெக கூட்டணியில் உள்ளதால், காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பது கடினமல்ல.
இதையும் படிக்க: “திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி.. உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!
சிலை திறப்பு நிகழ்ச்சியும் ஒத்திவைப்பு:
அதேபோல, டெல்லி ஜே.என்.யு வளாகத்தில் சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டிய தனது மற்றுமொரு திட்டத்தையும் கூட முதலமைச்சர் விஜய் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே, இந்தச் சந்திப்பு நடக்காததற்குப் பின்னால் அரசியல் ரீதியாக யூகங்கள் செய்வதற்கோ அல்லது பெரிய அளவில் யோசிப்பதற்கோ வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.