தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!
Tamilisai Soundararajan Criticizes Power Cut : தமிழக வெற்றி க் கழக ஆட்சியில் மின் வெட்டை மட்டும் பொது மக்களுக்கு அரசு அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை செளந்தர ராஜன் குற்றம் சாட்டினார் .
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற உண்ணாமுலை அம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அவர் அண்ணாமலையார் உடையார் உண்ணாமுலை அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தரிசனத்தை முடித்த பின்னர், தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகியோருடன் தரிசனம் மேற்கொள்ள வரும் பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.
தவெக ஆட்சியில் பெரும் எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்
இந்த கோயில்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். இதில், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா? சி.விஜயபாஸ்கர் நிலைப்பாடு என்ன!




மின் வெட்டை மட்டுமே பரிசாக அளித்த தவெக அரசு
ஆனால், மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ அவை கிடைக்காமல் தற்போது இந்த மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பவர் கொடுத்தனர். ஆனால், தவெக அரசு பவர் கட்டை மட்டுமே மக்களுக்கு திரும்ப வழங்கி உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவி இருந்தது. இந்த தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி எழுந்து வரும். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் பெற்று அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிகழ்ந்து வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் தற்போது அமைந்த தமிழக வெற்றி கழக ஆட்சியில் இருக்கக் கூடாது என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக பல்வேறு ஊர்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை.. மீறினால் பதவி பறிக்கப்படும்.. என்.ஆனந்த் மிரட்டல் பேச்சு!