வைகாசி மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
Tiruvannamalai Girivalam Auspicious Time: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, எந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜை மற்றும் கிரிவலம், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாகும். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவிலை சுற்றி அமைந்துள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப் பாதையில் வலம் வருவர். இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி பூஜை வருகிற சனிக்கிழமை ( மே 30- ஆம் தேதி) நடைபெறுகிறது.
பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வருவார்கள். அவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்களுக்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், மே 30- ஆம் தேதி ( சனிக்கிழமை) பிற்பகல் 12:50 மணி முதல் மறுநாள் 31- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:41 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பௌர்ணமியையொட்டி, மே 30- ஆம் தேதி வைகாசி விசாகம் என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பக்தர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்
அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதி, அவசர ஊர்தி, பாதுகாப்பு வசதி, பக்தர்கள் அமரும் இடம், அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிரிவல பாதையில் முன்னேற்பாட்டு பணிகள்
இதில், கிரிவல பாதை சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாத வகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி கிரிவலம் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல, கோவில் வளாகத்திலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் படிக்க: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத கோயில் திருவிழா: பாரம்பரியத்தை தக்கவைத்த மறையூர் கறிவிருந்து



