சட்டமன்ற தேர்தல்.. சிறையில் இருந்து ஜனநாயக கடமை… 61 கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு!
Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 61 கைதிகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் சிறைகளில் இருந்தவாறு தபால் மூலமாக தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். இது தொடர்பான முழு விவரம்.
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வகையில் சிறையில் உள்ள கைதிகளும் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள சிறைகளில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 16 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தண்டனை கைதிகளான 6 ஆயிரம் பேரை தவிர்த்து தடுப்பு காவல் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஆகியோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கைதிகளில் இவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால், விசாரணை கைதிகள் சில நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே சென்று விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு சிறையில் இருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவது கிடையாது.
61 கைதிகள் வாக்களிக்க உள்ளனர்
இதனால் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருந்து வரும் கைதிகளுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், சிறையில் உள்ள கைதிகள் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பம் உள்ள கைதிகள் தங்களது பெயர், தங்களது தொகுதி, வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி விவரம் உள்ளிட்டவற்றை அளித்திருந்தனர். அதன்படி, இந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய 61 கைதிகளுக்கு மட்டும் வாக்கு செலுத்துவதற்கு சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..




தபால் மூலம் வாக்களிக்கும் சிறை கைதிகள்
முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்து மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மத்தியில் வாக்களிப்பதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டது. இதில், விருப்பம் தெரிவித்த கைதிகளில் பெரும்பாலானவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை. இதனால், அவர்கள் வாக்களிக்க தகுதியுடையவராக இல்லாமல் போனர். மேலும், தேர்தலில் வாக்களிப்பதற்காக தகுதி பெற்ற 61 கைதிகள் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் கைதிகள் வாக்களிப்பதற்கான எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட உள்ளது.
தேர்தலில் அதிகபட்ச கைதிகள் வாக்களிப்பு
கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இருந்து அதிகபட்சமாக கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 132 சிறை கைதிகள் தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். இதே போல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக 15 சிறை கைதிகள் வாக்களித்தனர். பொதுவாக நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட தகுதி உடைய அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதற்காக, தேர்தல் ஆணையமும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!