3 நாட்கள் மது விற்பனைக்கு தடை… மீறினால் பாயும் நடவடிக்கை.. கலால் துறை அதிரடி உத்தரவு!
Liquor Shops Closed: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, வருகிற ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் ஏப்ரல் 23- ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும், இதை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 75,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதே போல, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால், தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் தமிழக முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 4,618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய பாதுகாப்பு படைகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 21- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை ( வியாழக்கிழமை) இரவு 12 மணி வரை மது கடைகளை மூட வேண்டும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதே போல, புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் உள்ள மது கடைகளை 3 நாட்கள் மூட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை மீறி திருட்டுத் தனமாக மது விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால், அவர்கள் மீது கலால் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ராமதாஸ் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவர் கொடுத்த அப்டேட்.. அடுத்த 2 நாட்கள் மிக முக்கியம்!




வாக்குப்பதிவு நாளில் கட்சியினர் இடையே மோதல்
பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் குவிந்திருப்பர். அப்போது, வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது, தங்களது கட்சிகளுக்கு வாக்கு செலுத்த கூறுவது என்பன உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடும்போது, அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் நிலை உள்ளது. இது போன்ற சம்பவங்களும் கடந்த தேர்தல்களில் நடைபெற்றுள்ளன. இதில், மதுபோதையில் தகராறு ஈடுபட்டு வருவதும் அவ்வப்போது நிகழ்ந்துள்ளன. அப்போது, அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில்
இதன் காரணமாக, இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இரு நாள்கள் முன்னதாகவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கலால் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிலும், புதுச்சேரி- தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி மதுபான கடைகளில் இருந்து மதுவை வாங்கி வரக்கூடாது என்பதை தவிர்ப்பதற்காக, அம்மாநில மதுக்கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!