தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!
DMK President MK Stalin : தமிழகத்தில் காலூன்றி ஆட்சி அமைக்க தொடங்கும் பாரதீய ஜனதா கட்சி என்ற பருந்தை விரட்டி அடிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அதிமுகவை விமர்சித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மறைந்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பெண்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டிய நாள் தான் ஏப்ரல் 23- ஆம் தேதியாகும். கொள்கையற்ற அடிமை கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழகத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனென்றால், திமுக அரசின் திட்டங்கள் வரலாற்று திட்டங்கள் அல்ல. புதிய வரலாற்றை படைக்க கூடிய திட்டமாகும். நான் கலைஞருடைய மகன். அறிவித்த திட்டங்களை உறுதியாக செய்வேன். சொல்லாமல் அதிரடியாகவும் செய்வேன்.
வடக்குக்கு வழிகாட்டியாக தெற்கு திகழ்கிறது
அதன்படி தான் வடக்கு வாழ்கிறது. தெற்கு பெய்கிறது என்ற நிலையை மாற்றி. தெற்கு தான் வழிகாட்டி என்ற நிலையை திராவிட மாடல் உருவாகி உள்ளது. அப்படி வழிகாட்டக்கூடிய தெற்க்கை வஞ்சிக்கும் வகையில் தான் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்குவதை காரணமாக காட்டி, மத்தியில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கின்றனர். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்க பார்க்கிறது. இதனை, இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்க போகிறோம்.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல் தொடக்கம்..




சைலன்ட் மோடில் இருக்கும் பிரதமர் மோடி
இந்த துஷ்பரியோகத்தை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா. உக்ரைன் போரை நிறுத்தி விட்டேன். அமெரிக்காவை அழறவிட்டேன் என்று கூறும் பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கை நாட்டுடன் பேச கூறினால் பின் வாங்குகிறார். மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இது, நமது பன்முகத்தன்மைக்கு பாஜக வெளியிட்டுள்ள நேரடி சவாலாகும். மேற்கு வங்கத்தில் பாஜக அளித்த வாக்குறுதியை தமிழகத்தில் அறிவிக்க முடியாத அதற்கு ஒரே காரணம் திராவிட பெருஞ்சுவர் இருப்பதனால் தான்.
தமிழகத்தை வட்டமிடும் பாஜக என்ற பருந்தை விரட்ட வேண்டும்
மும்மொழிக் கொள்கை, பொது சிவில் சட்டம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்து பேசியிருக்கிறாரா. அதிமுகவுக்கு விழுகிற ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு விழுவதாகும். தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டி அடக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தல் தமிழக அணிக்கும் – டெல்லி அணிக்குமான தேர்தலாகும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “அதிமுக, பாமகவிற்கு செக்”.. சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் புதிய தேர்தல் வியூகம்.. வெடிக்கும் அரசியல் போர்!!