ஏப்ரல் 11, 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ரோடு ஷோ மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக தி.மு. ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த வாரம் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதிமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம்:
இந்நிலையில், இன்று கடையநல்லூருக்கு வந்த திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் விஜய் நாளை பிரசாரம்.. விபரீதங்களை தடுக்க வித்தியாசமான ஏற்பாடு!
அப்போது நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத்தொகை, ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மேலும், ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!
வீட்டில் ஏற்கனவே ஃபிரிட்ஜ் இருந்தாலும், இன்னொன்று தேவையா என்ற கவலை வேண்டாம். அது போல (அதிமுக) ஆட்சியும் வராது; ஃபிரிட்ஜும் வராது. நம்முடைய ஆட்சிதான் வரும்.
முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்:
முதல்வர் சொல்வதை நிறைவேற்றுவார். அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.