ராமதாஸ் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவர் கொடுத்த அப்டேட்.. அடுத்த 2 நாட்கள் மிக முக்கியம்!
PMK Founder Ramadoss Health Issue: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்து மருத்துவர் விளக்கம் அளித்து உள்ளார். இதில், என்ன விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12) பள்ளப்பட்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மேடையில் இருந்து இறங்கிய போது, பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழ முயன்றார். அப்போது, உடன் இருந்த கட்சியினர் அவரை தாங்கி பிடித்து சேலம் குரங்கனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை ( ஏப்ரல் 13) சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ராமதாஸ் நலமுடன் இருந்து வருகிறார்
அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை1 குறித்து மருத்துவர் ராஜேஷ் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த காரணத்தால் இந்த திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராமதாஸ் உள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், நலமுடன் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ் – என்ன நடந்தது?




2 நாள்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ்
இரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன் பிறகு, அவர் வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலத்துக்கு ஏதேனும் குறை ஏற்பட்டால் யாரையும் சும்மா விடமாட்டேன் என்று அவரது மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்
அன்புமணி மற்றும் ராமதாஸ் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி அமைத்து 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கான பயணத் திட்டத்தை ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதன்படி, சேலத்தில் நேற்று தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்கி இருந்த நிலையில், ராமதாஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராமதாஸ் உடல்நிலை.. யாரையும் சும்மா விடமாட்டேன்.. அன்புமணி பகிரங்க எச்சரிக்கை!