தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!
Rahul Gandhi Boycott Campaign: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணி முரண்பாடு என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதே போல, ஏப்ரல் 15- ஆம் தேதி நாகர்கோவிலிலும், ஏப்ரல் 18- ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதே போல, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் பொதுக்கூட்டம் வருகிற ஏப்ரல் 15- ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி விவகாரத்தில் முரண்பாடு
ஏனென்றால், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்ற போது, தொகுதி பங்கீடு மற்றும் கூடுதல் தொகுதிகள் விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பிரச்சனை எழுந்து வந்தது. இதனால், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படியே, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியுமான பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
மேலும் படிக்க: தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!




தவெகவுடன் கூட்டணி இல்லாததால் ராகுல் அதிருப்தி
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதையும், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி உறவை முறித்துக் கொள்வதையும் ராகுல் காந்தியின் தாயான சோனியா காந்திக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. அதன் காரணமாக, ராகுல் காந்தியின் விருப்பத்திற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின்னரே, திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், தமிழக வெற்றி கழகத்துடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்காததால் ராகுல் காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருகிறாராம். இதன் வெளிப்பாடாகவே புதுச்சேரியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட அதே நாளில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு
இதே போல, கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக சென்னை மற்றும் கோவைக்கு வருகை தந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதேபோல, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் காந்திக்கு நெருங்கிய நபராக இருக்கும் கமல்ஹாசன் மூலமாக அழைப்பு விடுக்க திமுக தலைமை காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: ராமதாஸ் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவர் கொடுத்த அப்டேட்.. அடுத்த 2 நாட்கள் மிக முக்கியம்!