தமிழகத்தில் மீண்டும் வருகிறதா மேல்சபை? தனியார் கைக்குப் போகிறதா டாஸ்மாக்? தவெக அரசின் பட்ஜெட்டில் வரலாற்று முடிவு!
Tamilnadu Budget Announcement : தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் மேல் சபை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார மயமாக்குவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ள இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள், என்னென்ன சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதில், இரு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், முதலாவது தமிழக சட்டமன்றத்தில் மேல் சபை கொண்டுவர முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை அவசரம் இன்றி மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து, அதில் உள்ள திருத்தங்களை குறிப்பிடும் ஒரு ஆலோசனை சபை தான் மேல் சபை ஆகும்.
மேல்சபையில் இடம் பெறுபவர்கள் யார் யார்
இந்த சபையில் அரசியல்வாதிகள் இல்லாமல் ஆசிரியர்கள், டாக்டர்கள், கலைஞர்கள் மற்றும் வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சபையின் மூலமாக தவறான அல்லது அவசரமான சட்டங்கள் அமலாக்கப்படுவதை முன்கூட்டியே தடுக்கும். கடந்த 1986- ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட மேல் சபையை தான் தற்போதைய முதல்வர் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எம்ஜிஆர் ஆட்சியில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மேல் சபையை எம்ஜிஆர் கலைத்திருந்தார்.
மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. கைதிலிருந்து தப்பினார் செந்தில் பாலாஜி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




மேல்சபைக்கான மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப திட்டம்
தற்போது, மேல் சபை கொண்டு வருவதற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். தமிழகத்தில் மேல் சபை அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாலும், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகே தமிழகத்தில் மேல் சபை அமைக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல, மற்றொரு முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தனியார் வசமாகிறதா டாஸ்மாக் நிர்வாகம்
ஏனென்றால், மதுபானங்களை அரசே விற்பனை செய்வதால் தான் அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசுடைமையாக்கப்பட்ட மதுபான விற்பனையை தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. முதல்வர் விஜய் வழங்கினார்!