அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இல்லாததால் பேரவை சீக்கிரம் முடியும் என நினைத்தேன்… பிரேமலதா மீண்டும் அட்டாக்!
Premalatha Vijayakanth Criticized Aadhav Arjuna : பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் இல்லாததால் சீக்கிரம் முடிவடைந்து விடும் என்று நினைத்திருந்தேன்.. ஆனால், தொடர்ந்து நடைபெறுவதாக தேமுதிக எம். எல். ஏ. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார் .
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 28- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசுகையில், சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை என்ற பகுதியில் பெண் ஒருவர் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஆதவ் அர்ஜூனா இல்லாததால் சீக்கிரம் பேரவை முடியும்..
பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் இல்லாததால் பிற்பகல் 1:30 மணிக்கே பேரவை முடிந்து விடும் என நினைத்திருந்தேன். ஆனால், பேரவை நீண்டு கொண்டே செல்கிறது என்று தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த் இந்த பேச்சு அவையில் சிறிது நேரம் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே, நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை பேரவை அமைதியாக செல்கிறது.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..




ஆதவ் பேச ஆரம்பித்தால் சண்டை களமாக மாறிவிடுகிறது
அவர் பேசத் தொடங்கினால், பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டப்பேரவை, சண்டை பேரவை மாதிரி மாறி விடுவதாகவும், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், செப்டம்பர் 8- ஆம் தேதியுடன் பேரவை முடிவடையும் வரை பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச வேண்டாம் எனவும், அவரை பேச அனுமதிக்க வேண்டாம் எனவும் பேரவை தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவை 2-ஆவது முறையாக விமர்சித்த பிரேமலதா
இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலும், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது பிரேமலதா விஜயகாந்த் 2- ஆவது முறையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். இதில், அவர்களை மீட்டு தமிழகம் அனுப்பி வைக்கவும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 அமைச்சர்கள் நேபாளம் சென்றுள்ளதால் அவர்கள் பேரவையில் பங்கேற்கவில்லை.
மேலும் படிக்க: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.. சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..