அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.. சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..
கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பதிலளித்தார். ஈரான் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். வெங்காயம் உள்ளிட்ட 41 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆகஸ்ட் 28, 2026: அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உள்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து மற்றும் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!
ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்களை தற்போது வழங்கப்படும் அளவைவிட கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி:
தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அரிசி, சர்க்கரை, மிளகாய், புளி, வெல்லம், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, எந்த மாநிலத்தில் பொருட்களின் விலை குறைவாக உள்ளதோ, அங்கு சென்று கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாகவும், அதேபோன்ற நடவடிக்கையை தற்போதைய அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில்:
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பதிலளித்தார். ஈரான் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். வெங்காயம் உள்ளிட்ட 41 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!
விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும், ரேஷன் கடைகள் மட்டுமின்றி பசுமை அங்காடிகள் மூலமாகவும் அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலையும் தினசரி கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் வெங்கட்ராமன், வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.