‘தனித்தொகுதி’ என்ற சொல்லை மாற்றுக!.. சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ வைத்த முக்கிய கோரிக்கை!!
Rename Reserved Constituency: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'தனித்தொகுதி' என்ற சொல் பாகுபாடு மற்றும் தண்டனையைக் குறிப்பதாக உள்ளது என்றும், அதற்குப் பதிலாக 'சிறப்புத் தொகுதி' அல்லது 'உரிமைத் தொகுதி' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் சிந்து கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை முதலமைச்சர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 28: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிந்து, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளைக் குறிக்கப் பயன்படும் ‘தனித்தொகுதி’ என்ற சொற்களை மாற்ற வேண்டும் என்ற மிக முக்கிய சமூக மற்றும் மொழிசார்ந்த கோரிக்கையை எழுப்பினார்.
இதையும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!
அடைப்புக்குறியில் ‘தனித்தொகுதி’:
சட்டமன்றத்தில் பேசிய தவெக உறுப்பினர் சிந்து, “தனக்கு வரும் அதிகாரப்பூர்வ கடிதங்களில் கூட ‘தனித்தொகுதி’ என்று அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டு வருகிறது. நம்முடைய அன்றாடப் புழக்கத்தில் ‘தனி’ என்ற சொல் ஏதோ ஒரு வகையில் பாகுபாட்டையோ அல்லது தண்டனையையோ குறிப்பதாகவே அமைந்திருக்கிறது. உதாரணமாக ‘அந்தப் பெண்ணைத் தனியாக வைப்பது’, ‘அவனைத் தனிமைப்படுத்துவது’ அல்லது ‘சிறையில் அடைப்பது’ போன்ற சூழல்களிலேயே ‘தனி’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
‘சிறப்புத் தொகுதி’ என மாற்றலாம்:
மேலும் பேசிய அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைக் குறிப்பிட்டு தனது கோரிக்கையை விளக்கினார். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 330 மற்றும் 332 ஆகியவற்றின் படி, பட்டியலின மக்களுக்கு சிறப்பு உரிமைகளே வழங்கப்பட்டிருக்கின்றனவே தவிர, அது தனிமைப்படுத்துவது அல்ல. எனவே, ‘ரிசர்வேஷன்’ என்பதற்கு நேரடியான அர்த்தம் ‘தனி’ என்பது கிடையாது. இது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை என்பதால் ‘Special Constituency’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ‘தனி தொகுதி’ என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக ‘சிறப்புத் தொகுதி’ அல்லது ‘உரிமைத் தொகுதி’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் மொழியில் “ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்பதால் இந்தச் சொல் மாற்றம் அவசியமானது என்பதையும் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம்.. ஒரே நாளில் சரிந்த ரியல் எஸ்டேட் சந்தை!!
மிக நல்ல யோசனை:
தவெக உறுப்பினர் சிந்து முன்வைத்த இந்த ஆக்கபூர்வமான யோசனையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், “உறுப்பினர் சிந்து கூறியுள்ளது மிக நல்ல யோசனை. இந்த யோசனையை முதலமைச்சரின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லலாம். இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நல்லதொரு முடிவு எடுக்கப்படலாம்” என்று பதில் அளித்து உறுதியளித்தார். அவையில் இருந்து உறுப்பினர்களும் அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.