கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம்.. ஒரே நாளில் சரிந்த ரியல் எஸ்டேட் சந்தை!!
Parandur Airport Project Cancelled: சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப் பகுதியில் நில மதிப்பு ஒரே நாளில் 5% வரை சரிந்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இடம்பெயரும் மக்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மாதிரி வீடுகளும் தற்போது எந்தப் பயன்பாடும் இன்றி வீணாகியுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 28: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் வருங்காலப் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. பல்வேறு படிநிலைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, பரனூர் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட பல பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வந்தன.
மேலும் படிக்க: நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பிழைத்த 21 பேரின் விவரம்- புகைப்படம்.. இந்திய வெளியுறவுத்துறை வெளியீடு!
நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்வு:
விமான நிலைய அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை, பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. ஆனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், அப் பகுதியின் ரியல் எஸ்டேட் சந்தை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது. நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பல மடங்கு உயர்ந்தது. இதனால் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், தனிநபர் முதலீட்டாளர்களும் அப்பகுதியில் பெருமளவில் நிலங்களை வாங்கி முதலீடு செய்தனர்.
சட்டென சரிந்த நிலத்தின் மதிப்பு:
இந்நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை தற்போதைய தமிழ்நாடு அரசு ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான ஒரே நாளில், உச்சத்தில் இருந்த பரந்தூர் பகுதி நிலங்களின் மதிப்பு சுமார் 5 விழுக்காடு வரை சட்டெனக் கீழே சரிந்தது. எதிர்பாராத இந்த திடீர் விலைச் சரிவால் அங்கு பெருந்தொகையை முதலீடு செய்திருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், அதிக விலை கொடுத்து நிலங்களை வாங்கிய பொதுமக்களும் பலத்த பொருளாதார இழப்பையும் அதிர்ச்சியையும் சந்தித்துள்ளனர்.
மாதிரி வீடுகள் உருவாக்கம்:
மறுபுறம், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்களை வழங்கி இடம்பெயர வேண்டியிருந்த கிராம மக்களுக்காக, சுமார் 1,500 புதிய வீடுகளைக் கட்டித் தர முந்தைய ஆட்சியில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இரண்டு வெவ்வேறு வடிவங்களிலான மாதிரி வீடுகள் (Model Houses) உருவாக்கப்பட்டு, சென்னை – வேலூர் – ஸ்ரீபெரும்புதூர் பைபாஸ் சாலையோரத்திலுள்ள காரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்தன. நிலம் இழக்கும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் நேரில் சென்று அந்த மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு, தங்களுக்குப் பிடித்தமான வீட்டின் வடிவமைப்பை விருப்பமுடன் தேர்வு செய்தும் வைத்திருந்தனர்.
மேலும் படிக்க: அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
வீணான மாதிரி வீடுகள்:
தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டு விட்டதால், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த மாதிரி வீடுகள் எந்தவிதப் பயன்பாடும் இன்றி பூட்டிக்கிடந்து வீணாகி வருகின்றன. இருப்பினும், இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, தங்கள் சொந்த நிலத்தையும் வீடுகளையும் இழந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்த கிராம மக்கள், தொடர்ந்து தங்களது பழைய வீடுகளிலேயே வசசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.