நீர்வளத்துறை டெண்டர்களில் ரூ. 42 லட்சம் குளறுபடியா.. குண்டை தூக்கி போட்ட நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran : தமிழக அரசு வெளியிட்டுள்ள நீர்வளத்துறை டெண்டர்களில் ரூ. 42 லட்சம் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள நீர்வளத்துறை டெண்டர்களில் ரூ. 42 கோடி குளறுபடி நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை சார்பில் ரூ. 42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மெகா முறைகேடு அரங்கேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு 2 நாள்களும், 50- க்கும் மேற்பட்ட பணிகளுக்கு 7 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. அதன்படி, இந்த டெண்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஒப்பந்த புள்ளி குளறுபடிகள் கண்டனத்துக்குரியவை
இதில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் இரு நாட்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டது எதற்காக. ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிபந்தனைகள் வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன. தொழில்நுட்ப ஓட்டைகளை பயன்படுத்தி அதிகாரிகள் மற்றும் சில ஆதிக்கம் செலுத்தும் ஒப்பந்ததாரர்கள் கைகோர்த்து சிண்டிகேட் அமைத்து மற்றவர்களை தடுப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் கடும் கண்டனத்திற்குரியவை ஆகும்.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!




ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்க
எனவே, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், ஆன்லைன் டெண்டர் தொடர்பான ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில், ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து, கூடுதல் கால அவகாசத்துடன் முறையான டெண்டர்களை மீண்டும் வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் படம் வாங்கியதில் முறைகேடு
ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படங்களை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் நீர்வளத் துறை டெண்டர் முறைகேடு மற்றும் முதல்வர் விஜய் புகைப்பட கொள்முதல் முறைகேடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: ஆபாச படத்தை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்.. சென்னையில் பெண் அளித்த புகாரில் முன்னாள் காதலனுக்கு சிறை!